நெல்லையில் பொதிகைத் தமிழ்ச் சங்க 7-ஆம் ஆண்டு தொடக்க விழா
சபாநாயகர் மு.அப்பாவு பங்கேற்பு
நெல்லையில் நடந்த பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் மு.அப்பாவு கலந்து கொண்டு சங்கத்தின் சாதனை மலரை வெளியிட்டு உரையாற்றியிருந்தார்.
நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் 7-ஆம் ஆண்டின் தொடக்க விழா நெல்லை அரசு அருங்காட்சியக திறந்த நிலைக் கலையரங்கில் நடைபெற்றது.
பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பே.இராஜேந்திரன் வரவேற்புரை வழங்கினார்.
அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி முன்னிலையுரை வழங்கினார்.
கடந்த ஆறு ஆண்டுகளின் நிகழ்ச்சிகளை தொகுத்து தயாரிக்கப்பட்டுள்ள சாதனை மலரை தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் மு.அப்பாவு வெளியிட்டார்.
மலரின் முதல் படியை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து தமிழறிஞர்களுக்கு பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் விருதுகளையும்,மாணவ மாணவிகளுக்குப் பரிசுகளையும் சபாநாயகர் மு.அப்பாவு வழங்கி விழாப் பேருரை வழங்கினார்.
நெல்லை அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளிக்கு “பொருநையின் பொன்மகள்” என்ற விருதும்,துபாய் நாட்டுத் தமிழ் ஆர்வலர் முனைவர் முகமது முகைதீனுக்கு “செந்தமிழ்ச் செல்வர்”என்ற விருதும்,நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பாக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் சௌந்தர மகாதேவனுக்கு “செந்தமிழின் சொல்வேந்தர் “என்ற விருதும்,முனைவர் இராஜ.மதிவாணனுக்கு “இயற்கையின் காதலர் “என்ற விருதும்,திருக்குறள் இரா.முருகனுக்கு “திருக்குறளின் திருத்தொண்டர் “என்ற விருதும் பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது. இந்த விருதுகளை சபாநாயகர் வழங்கிச் சிறப்பித்தார்.
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன்,துணை மேயர் கே. ஆர்.ராஜூ,மேனாள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக “பொருநை நாகரிகமே உலக நாகரிகத் தொட்டில்”என்ற தலைப்பிலான கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளையும்,பங்கேற்றவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும் சபாநாயகர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மருத்துவ இசைஞர் பிரேமச் சந்திரன்,கத்தார் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த முகமது ஹபீப் ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு அரசின் “தூயதமிழ்ப் பற்றாளர் “விருதினைப் பெற்றுள்ள கவிஞர் பே. இராஜேந்திரனுக்கு நெல்லை மாவட்ட தமிழ் அமைப்புகளின் கூட்டியக்கம் சார்பில் வாழ்த்து மடல் வாசிக்கப்பட்டு,சபாநாயகர் அவர்களால் வழங்கி பாராட்டப்பட்டது.
நிறைவாக திருக்குறள் இரா.முருகன் நன்றியுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள்,திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள்,கல்லூரி,பள்ளி மாணவ மாணவிகள் என திரளானோர் பங்கேற்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பே.இராஜேந்திரன் விரிவாக செய்திருந்தார்.