கடும் விமர்சனங்களுக்குப் பின்னர் ஐக்கிய ராச்சியமும் உக்ரேன் அகதிகள் பற்றிய தனது போக்கை மாற்றிக்கொண்டது.
ஐரோப்பிய நாடுகள் பலவும் உக்ரேனில் போரினால் பாதிக்கப்படும் அகதிகளை வரவேற்கத் தயாராகத் தமது குடிவரவுச் சட்டங்களைத் தளர்த்தியிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியமும் அதற்காகத் தனது அங்கத்துவர்களைத் தயார்ப்படுத்தி வருகிறது. ஐக்கிய ராச்சியமோ தனது நாட்டுக்குள் வாழும் உக்ரேனியர்களின் உறவினர்களை மட்டும் தடையின்றி வரலாம் என்று குறிப்பிட்டிருந்தது. மற்ற அகதிகள் முறையான விசாவை விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று கோரியிருந்தது.
ஐக்கிய ராச்சியத்தின் உக்ரேன் அகதிகள் பற்றிய மேற்கண்ட போக்கு பல கோணங்களிலிருந்தும் விமர்சனங்களைப் பெற்றது. உள்ளூராட்சி அமைச்சரின் ராஜினாமாவையும் ஒரு சாரார் கோரிவந்தனர். அமைச்சர் மைக்கல் கோவ் “Homes for Ukraine” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதன்படி தனியாரோ, நிறுவனங்களோ, உதவி அமைப்புக்களோ குறிப்பிட்ட ஒரு உக்ரேனியரைத் தமது பொறுப்பில் வரவழைக்கலாம்.
குறிப்பிட்ட நபருக்கான தங்குமிடம் போன்றவைகளை நாட்டுக்கு அந்த நபரை வரவேற்பவர் ஒழுங்குசெய்யவேண்டும். தங்குமிடம் போன்றவைகளை ஒழுங்குசெய்து கொடுக்கும் நபருக்கோ, குடும்பத்துக்கோ 350 பிரிட்டிஷ் பவுண்டுகள் சன்மானமாக அரசால் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உக்ரேன் அகதிகளில் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளுமாக இருப்பதால் வரவேற்பவரின் பின்னணியை அரசு ஆராயும். அது போலவே அகதியின் பின்னணியும் பாதுகாப்பு அமைச்சால் பரிசீலிக்கப்படும். நாட்டுக்குள் வரும் அகதியொருவர் 3 வருடங்களுக்குத் தங்கவும், வேலை தேடிக்கொள்ளவும் ஐக்கிய ராச்சியம் அனுமதி கொடுக்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்