உக்ரேன் அகதிகளை உள்ளே விட மறுத்துத் திருப்பியனுப்பியது டென்மார்க்.
தனது நாட்டுக்குள் அகதிகளாக வேண்டி வருபவர்களைக் கட்டுப்படுத்த சமீப வருடங்களில் கடுமையான விதிகளை அறிமுகப்படுத்திய நாடு டென்மார்க். அதனால் சக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் விமர்சனத்தைப் பெற்றாலும் ஒதுக்கிவிட்டுச் சட்டத்துக்குப் புறம்பாக நாட்டுக்குள் நுழைபவர்களைப் பெரும்பாலும் டென்மார்க்குக்கு வெளியே ஒரு முகாமில் வைத்திருக்க இடம் தேடிக்கொண்டிருந்தது.
உக்ரேனிய அகதிகளைப் பொறுத்தவரையில் புதிய விதிகளை அவசரமாக வெளியிட்டது. மிக வேகமாக அவர்களுக்கு அகதிகள் அடையாளத்தைக் கொடுத்து, சமூகத்தின் சகல சேவைகளையும் பெற்றுக்கொள்ள வழி செய்வதாக டென்மார்க் குறிப்பிட்டிருந்தது. அவர்கள் டென்மார்க்கில் வேலை தேடிக்கொள்ளவும் அனுமதிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.
ஜேர்மனியினூடாக டென்மார்க்குக்கு வரும் உக்ரேன் அகதிகளில் சுமார் 10 – 20 பேரைத் தினசரி டென்மார்க் எல்லையில் திருப்பியனுப்பி வருகிறது டேனிஷ் பொலீஸ். வெள்ளியன்று முதல் இதுவரை 250 பேருக்கும் குறையாத உக்ரேனிய அகதிகளை டென்மார்க் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை என்று டனிஷ் வானொலியின் செய்தி குறிப்பிடுகிறது.
டென்மார்க் எல்லைக்குள் நுழைவதற்கு அவர்கள் உடலியல் அடையாளங்களைக் கொண்ட எலெக்ரோனிக் சீவலுடனான அடையாள அட்டை (biometric passport + electronic chip) தேவை. அல்லது அவர்கள் டென்மார்க்கில் அகதிகளாகப் பதியவேண்டும். டென்மார்க் ஊடாக வேறு நாடுகளுக்குப் போகிறவர்களே டென்மார்க் எல்லையில் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்