சவூதி அரேபியாவின் எரிவாயு, சுத்திகரிப்பு மையங்களின் மீது ஹூத்திகள் தாக்கியும் எவ்வித அழிவுமில்லை.
சவூதி அரேபிய அரசின் எரிசக்தி நிறுவனத்தின் மையங்கள் மீது யேமனைச் சேர்ந்த ஹுத்தி இயக்கத்தினர் ஞாயிறன்று குண்டுகளுடனான காற்றாடி விமானத்தால் தாக்கியிருந்தார்கள். அத்தாக்குதல்கள் எரிசக்தி நிலையங்களுக்கு எவ்வித பாதிப்பையும் கொடுக்கவில்லை. அக்கட்டடங்களை அடுத்து நிறுத்தப்பட்டிருந்த தனியார் வாகனங்கள், வீடுகளைச் சேதப்படுத்தியிருப்பதாக சவூதி அரேபிய அரசு தெரிவித்தது.
யேமனிலிருந்து சவூதிய எல்லைக்குள் தாம் கடும் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக ஹூத்தி இயக்கப் பிரதிநிதி ஒருவரும் அறிக்கை வெளியிட்டிருந்தார். தனது பக்கத்து நாட்டு இராணுவத்தினருடன் சேர்ந்து சவூதி அரேபியா யேமனில் நடத்திவரும் போரில் அந்த நாடு பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த நிலைமையை, “உலகின் எந்தப் போரிலும் ஏற்படாத மனித இழப்புக்கள், சமூக அழிவு.” என்று ஐ.நா பல தடவைகள் தனது அறிக்கையில் குறிப்பிட்டு வருகிறது.
யேமனின் ஹுடேய்டாத் துறைமுக நகருக்கு வெளியே ஹூத்தி இயக்கத்தின் படகொன்று வெடிமருந்துகளை ஏற்றிச் சென்றதாகவும் அதைத் தனது இராணுவம் தாக்கி அழித்திருப்பதாகவும் சவூதி அரேபியாவின் தொலைக்காட்சிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்