சவூதியின் கோல்ப் பந்தயத்தில் வெற்றிபெற்றார் தென்னாபிரிக்கரான சார்ல் ஷ்வார்ட்சல்.

சர்வதேச கோல்ப் பந்தயங்களின் அரங்கில் புதியதாக மிகப் பெரிய பரிசுத் தொகையுடன் நுழைந்து சலசலப்பை ஏற்படுத்திய சவூதி அரேபியாவின் கோல்ப் பந்தயமான LIV Golf event முடிவுபெற்றது. அதன் முதல் பரிசான 4.75 மில்லியன் டொலர்களைப் பெற்றுக் கோப்பையைக் கைப்பற்றினார், கோல்ப் பந்தயச் சுற்றுகளின் கோப்பையைக் கைப்பற்றியிருந்த முன்னாள் வீரர் சார்ல் ஷ்வார்ட்சல்.

சவூதி அரேபிய அரசின் கோல்ப் சுற்றில் விளையாட PGA சுற்று வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. – வெற்றிநடை (vetrinadai.com)

கோல்ப் பந்தயங்களில் மிக முக்கியமான அதிகாரமான PGA சுற்று கோல்ப் பந்தயங்களில் பங்குபற்றி வந்த ஷ்வார்ட்ஸ் இந்தப் பந்தயங்களில் பங்கெடுப்பதற்காகத் தனது PGA சுற்று கோல்ப் அங்கத்துவத்தை உதற வேண்டியிருந்தது. காரணம், திடீரென்று இடையில் புகுந்து சர்வதேசப் போட்டிகளின் சமயத்தில் தமது பந்தயத்தை நடத்திய சவூதிய பந்தயத்தை PGA சுற்று கோல்ப் அதிகாரம் அங்கீகரிக்க மறுத்தது. அந்தப் போட்டிகளில் பங்குபற்றுகிறவர்கள் தமது சுற்றுக்களில் பங்குபற்ற முடியாதென்றும் அறிவித்தது.

PGA சுற்று கோல்ப் பந்தயங்களில் இனிமேல் விளையாட முடியாவிட்டாலும் ஷ்வார்ட்சல் சவூதியப் பந்தயங்களில் மொத்தமாக ஈட்டியிருக்கும் 4.75 மில்லியன் டொலர்கள் அவர் கடந்த நாலு வருடங்களில் பங்குபற்றிப் பெற்ற பரிசுத் தொகைகளுக்கு ஈடானதாகும். 

“இப்படியான ஒரு தொகையை கோல்ப் பந்தயங்களில் வெல்லமுடியும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. எனது கடந்த 20 வருட கோல்ப் வாழ்க்கையில் பரிசுத்தொகை எங்கிருந்து வருகிறது என்று நான் என்றுமே கவனித்ததில்லை. தோண்ட ஆரம்பித்தால் எங்கேயும் தவறைக் காணலாம்,” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் ஷ்வார்ட்சல்.

சுமார் 20 கோல்ப் விளையாட்டு வீரர்கள் சவூதியின் கோல்ப் பந்தயங்களில் பதிந்துகொண்டார்கள். அவர்களில் எவரும் உலகின் முன்னணியிலிருக்கும் 10 கோல்ப் வீரர்கள் பட்டியலில் இல்லை.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *