ஆஸ்ரேலியாவுக்கு வெளியே தஞ்சம் கோரிக் காத்திருப்பவர்களில் 450 பேரை ஏற்றுக்கொள்ள விரும்புகிறது நியூசிலாந்து.
ஆஸ்ரேலிய எல்லைக்கு வெளியேயும், மெல்போர்ன் பார்க் ஹோட்டல் போன்ற தஞ்சம் கோருகிறவர்களுக்கான முகாம்களிலும் தமது எதிர்காலம் என்னவென்று அறியாமல் வாழ்பவர்களில் 450 பேரை அகதிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டி விண்ணப்பித்திருக்கிறது நியூசிலாந்து. வருடாவருடம் 150 பேராக மூன்று வருடங்களுக்கு அத்தொகை அகதிகளை அங்கீகரிக்க விரும்புகிறது நியூசிலாந்து.
இதேபோன்று 2013 லும் ஆஸ்ரேலியாவிடம் நியூசிலாந்து கேட்டுக்கொண்டு அதை ஆஸ்ரேலியா மறுத்துவிட்டிருக்கிறது. பதிலாக அமெரிக்காவுடன் அதுபற்றிப் பேசிக்கொண்டு இதுவரை 1,000 பேரை அமெரிக்கா ஏற்றுக்கொண்டிருக்கிறது.
2013 இல் தனது நாட்டுக்குத் தஞ்சம் கோரிக் கடல் வழியாக வருபவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது ஆஸ்ரேலியா. அதன்படி தஞ்சம் கோரி வரும் அந்தக் குழுவினருக்கு எக்காரணம் கொண்டும் ஆஸ்ரேலியாவுக்குள் நுழைந்து சாதாரண வாழ்வு வாழ முடியாது. அவர்கள் அச்சமயத்தில் பப்புவா நியூ கினியா, நௌரு ஆகிய தீவுகளின் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
ஆஸ்ரேலியாவின் எல்லைக்கு வெளியேயிருந்த அந்த முகாம்கள் சிறைச்சாலை போன்று செயற்படுகிறது போன்ற பல கடுமையான விமர்சனங்களை அடுத்து அவைகள் மூடப்பட்டன. ஒரு பகுதியினர் மெல்போர்ன் பார்க் ஹோட்டல் முகாமிற்குக் கொண்டுவரப்பட்டனர். சில நூறு பேர் அந்தத் தீவுகளிலேயே தங்கியிருப்பதாகத் தெரிகிறது.
‘கடல் வழியாகத் தஞ்சம் கோரி வருபவர்களை ஊக்குவிக்காமலிருப்பதே ஆஸ்ரேலியாவின் முக்கிய நோக்கம். உயிருக்குப் பெரும் ஆபத்தான அவ்வழியில் வருபவர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்வதன் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிர்களைப் பலிகொடுக்கும் வழி திறந்திருக்கும். எனவே, ஆஸ்ரேலியா அகதிகள் பற்றிய தனது கோட்பாட்டில் கிஞ்சித்தும் தளம்பப்போவதில்லை,’ என்று சமீபத்திலும் ஆஸ்ரேலிய உள்ளூராட்சி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்