எதிர்க்கட்சிகள் கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பில் தப்புவாரா இம்ரான் கான்?

கடந்த வாரங்களில் பாகிஸ்தானிய அரசியலில் வீசிக்கொண்டிருக்கும் சூறாவளியின் வேகம் கழிந்த வார இறுதியில் அரசியல் ஊர்வலங்களாக உருவெடுத்திருந்தது. ஆட்சியிலிருக்கும் இம்ரான் கானின் தஹ்ரீக் ஈ இன்சாப் கட்சி இதுவரை சந்தித்த சகல சவால்களுக்கும் உச்சக்கட்டமான சவாலை எதிர்க்கட்சிகள் வீசியிருக்கின்றன. ஜனநாயக முன்னணி என்ற பெயரில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.

மயிரிழை வித்தியாசத்தில் 2018 இல் பதவிக்கு வந்த இம்ரான் கானின் ஆட்சிக்காலத்தில் அடுக்கடுக்காக நாட்டில் ஏற்பட்ட இக்கட்டுகளால் பொருளாதாரம் பெருமளவில் சீரழிந்திருக்கிறது. மக்களிடையே பரவியிருக்கும் அதிருப்தியைப் பாவித்துச் சமயம் பார்த்து எதிர்க்கட்சிகள் கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வியாழனன்று பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்கப்படவிருக்கிறது. பல நாட்களுக்கு முன்னரே விவாதத்துக்குள்ளாக்கப்படவேண்டிய அப்பிரேரணையைப் பாராளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் இம்ரான் கான் செய்த தகிடுதித்தங்கள் எல்லாமே தோல்வியில் முடிவடைந்தன.

இம்ரான் கான் பாராளுமன்றத்தைச் சந்திக்காமல் தவிர்க்க முயற்சிகளெடுத்துவந்த தருணத்தில் எதிர்க்கட்சிகள் இம்ரான் கான் ஆதரவாளர்களிடையே பேரம் பேசி சுமார் 20 பேரை இம்ரானின் அரசைக் கவிழ்க்க வாக்களிக்கத் தயார் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. கட்சி மாறத் தயாரானவர்கள் பல வாரங்களாகவே வெளியில் தலைகாட்டாமல் எதிர்க்கட்சியின் ஓய்வு விடுதியொன்றில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகக் இம்ரான் கான் குற்றஞ்சாட்டி வருகிறார்.

342 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள பாகிஸ்தானியப் பாராளுமன்றத்தில் 176 பேரின் ஆதரவுடனேயே இம்ரான் கான் கூட்டணி ஆட்சி அமைத்திருந்தார். அத்துடன் அவருக்கு நீண்ட காலமாகவே பாகிஸ்தான் இராணுவத்தின் ஆதரவும் இருந்தது. ஓரிரு வாரங்களுக்கு முன்னர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைப் பொறுத்தவரை தாம் எவர் பக்கமும் சாராமல் இருக்கப்போவதாக இராணுவத்தினர் அறிவித்திருக்கிறார்கள். 

172 பேர் ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே இம்ரான் கான் அரசு கவிழாமலிருக்கும். அவரிடமிருந்து விலகிவிட்ட ஆதரவாளர்களில் வெளிப்படையாக அதை ஒத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கயைக் கவனித்தாலே இம்ரான் கானுடைய அரசு நிலைக்காது என்ற நிலைமை உண்டாகியிருக்கிறது. 

தனது அரசுக்கு எதிராக வெளிநாட்டுச் சக்திகள் செயற்பட்டு வருவதாக இம்ரான் கான் குற்றஞ்சாட்டி வருகிறார். விவாதங்கள் முடிந்த பின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் முன்வைக்கப்பட்ட ஒரு வாரத்தினுள் அதன் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்று பாராளுமன்றச் சபாநாயகர் குறிப்பிட்டிருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *