பாகிஸ்தான் தலிபான்களின் யுத்தப் பிரகடனம், ஆப்கான் தலிபான்களிடம் பாகிஸ்தான் உதவி கோருகிறது.

“மீண்டும் அரசுடன் எங்கள் ஆயுதப்போர் ஆரம்பிக்கிறது,” என்ற பாகிஸ்தான் தலிபான்களின் அறைகூவலை அடுத்து பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் ஹினா ரபானி கார் ஆப்கானிஸ்தான் சென்றிருக்கிறார். அவரை ஆப்கானிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி தனது காபுல் அலுவலகத்தி வரவேற்றதாகச் செய்திகள் வெளியாகின.  

தஹ்ரீக் ஏ தலிபான் என்றழைக்கப்படும் ஆயுதம் தாங்கிய இயக்கம் பாகிஸ்தானில் ஒரு இஸ்லாமிய அரசை உண்டாக்கப் போராடி வருகிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கிளையாக இருப்பினும் ஆப்கான் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத அந்த அமைப்பு பாகிஸ்தான் அரசாங்கத்தை வீழ்த்தி அங்கு தமது ஷரியா இஸ்லாம் நாடொன்றை அமைப்பதற்காகப் போராடி வருகிறது.

இம்ரான் கானுக்குப் பின்னர் ஆட்சிக்க்கு வந்த பாகிஸ்தான் அரசுடன் போர் நிறுத்தம் செய்திருந்த அவர்கள் ஒரு சில நாட்களுக்கு முன்னர் அது முடிந்து விட்டதாகக் கூறித் தமது போராளிகள் பாகிஸ்தானின் வெவ்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தவிருப்பதாக அறைகூவியிருக்கிறார்கள். அவர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் இருந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்கிவிட்டு மீண்டும் ஆப்கானிஸ்தானுக்குள் ஓடிவிடுகிறார்கள் என்று பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. எனவே, பாகிஸ்தான் வான்படையினர் ஆப்கான் எல்லைக்குள் நுழைந்து அவர்களின் மையங்களைத் தாக்குவதுண்டு.

அதனால் ஆப்கானிஸ்தானுடனான தனது பலூச்சிஸ்தான் எல்லையைப் பாகிஸ்தான் மூடிவிட்டிருந்தது. அதை மீண்டும் திறந்து, அந்த எல்லையூடாக இரண்டு நாடுகளுக்குமிடையே வர்த்தகத்தை அதிகப்படுத்துவது பற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்ததாகச் செய்திகள் வெளியாகின. பதிலாக ஆப்கானிஸ்தான் தரப்பினரிடமிருந்து பாகிஸ்தான் தலிபான்களிடமிருந்து பாதுகாப்பு உறுதிகளைப் பாகிஸ்தான் கோரியதா என்பது பற்றிக் குறிப்பிடப்படவில்லை.

ஆப்கானிஸ்தான் ஆட்சியைத் தலிபான்கள் கைப்பற்றியது முதல் அவர்களை உலக நாடுகள் எவரும் – பாகிஸ்தான் உட்பட –  அங்கீகரிக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகளை மதிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி உலக நாடுகள் வற்புறுத்தி வருகின்றன. முக்கியமாகப் பெண்களின் உரிமைகளை மதித்து அவர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளுக்கான ஒழுங்குகளைச் செய்யும்படிக் கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஆப்கானிஸ்தானில் தலிபான்களோ அதற்கு எதிரான கோணத்திலேயே நகர்ந்து வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தான் தலிபான்களைப் பொறுத்தவரை பக்கத்து நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானுடனான வர்த்தக, அரசியல் உறவுகள் மிக முக்கியமானவை. அதற்காக அவர்கள் தம்மைப் போலவே ஷரியாச் சட்டங்களுடனான அரசைப் பாகிஸ்தானில் உண்டாக்கப் போரிடும் பாகிஸ்தான் தலிபான்களுடனான தொடர்புகளை வெட்டிக்கொள்வார்களா என்பது தெரியவில்லை.

பாகிஸ்தானியத் தலிபான்கள் அரசுடன் போர் அறைகூவல் விடுத்த ஓரிரு நாட்களிலேயே குவெட்டா நகரில் தற்கொலைத் தாக்குதல் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். புதனன்று அந்த நகரில் பொலீஸ் வாகனமொன்றைத் தாக்கியதில் ஒரு பொலீஸ் உத்தியோகத்தரும், மற்றும் இரண்டு பேரும் இறந்திருக்கிறார்கள். மேலும் 20 பொலீசார் காயப்பட்டிருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *