வியாழக்கிழமை விளையாட்டில் விறுவிறுப்பைக் கலந்தவர்கள் ஜப்பான் அணியினர்.

கத்தார்2022 மோதல்கள் வியாழனன்றும் விறுவிறுப்பாக இருந்தன எனலாம். மேலும் சொல்லப்போனால் உதைபந்தாட்ட உலகின் திறமைகள் எனப்படும் பெல்ஜியம், ஜேர்மனி அணிகளுக்கு இருண்ட நாளாகவும் அமைந்திருந்தன. அவ்விரண்டு அணிகளும் தத்தம் குழுக்களில் வெற்றிபெற்று அடுத்த கட்டத்துக்கு முன்னேறத் தேவையான புள்ளிகளை எடுக்க முடியாததால் நாட்டுக்குத் திரும்பவேண்டியதாயிற்று.

முதலாவது மோதல்களில் ஒரு பக்கம் மொரொக்கோ அணியினர் கனடாவை எதிர்கொண்டனர். இன்னொரு அரங்கில் பெல்ஜியத்தின் “தங்கத் தலைமுறை” கிரவேசிய அணியை நேரிட்டு விளையாடியது. கனடா – மொரொக்கோ மோதலில் ஒரேயொரு தடவையே வலைக்குள் பந்தைத் தள்ளுவதில் வெற்றிபெற்றது கனடா. அனாயாசமாக விளையாடிய மொரொக்கோ அணியினரோ இரண்டு தடவைகள் கனடாவின் வலைக்குள் பந்தை உதைத்து வெற்றிவாகை சூடினார்கள்.

மொரொக்கோவின் வெற்றியானது பெல்ஜியத்தின் நிலையைச் சிக்கலாக்கியது. அவர்கள் தமது வெற்றியை அதிக வித்தியாசத்தில் வென்றாலே அடுத்த கட்டமான 16 அணிகளுக்கிடையேயான மோதலுக்கு முன்னேறலாம் என்ற நிலை. விளையாட்டுத் திறமை, அதன் நுட்பம், அழகு எல்லாவற்றிலுமே பெல்ஜிய அணி பார்வையாளர்களைக் கவர்ந்தது. கிரவேசிய அணியும் தாம் சளைத்தவர்களல்ல என்று காட்டிக்கொண்டேயிருந்தது. கிரவேசிய வலைக்குள் பந்தை உதைத்துத் தள்ளப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும் கூட அதிர்ஷ்டம் பெல்ஜிய அணியினரிடம் இல்லவேயில்லை. விளையாட்டு 0 – 0 என்று முடிய பெல்ஜிய அணியின் தலைமை நிர்வாகி தனது பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

ஜேர்மனி – கொஸ்டா ரிக்கா அணியினரில் விளையாட்டு சோம்பலாகவே ஆரம்பித்தது. இன்னொரு அரங்கில் ஜப்பான் தனது முன்னேற்றத்தைத் தானாக நிரூபித்தே ஆகவேண்டிய நிலையில் ஏற்கனவே அடுத்த கட்டத்துக்கு நகரும் என்று முடிவாகிவிட்ட ஸ்பெய்ன் அணியை எதிர்கொண்டது. புள்ளிகள் விடயத்தில் மொரொக்கோ தவிர மற்றைய மூன்று அணிகளில் எவருமே முன்னேறலாம் என்ற நிலை நேரம் போகப் போக விளையாட்டு மைதானங்களில் விறுவிறுப்பை உசுப்பிக்கொண்டிருந்தது.

ஜேர்மனியும் ஸ்பெய்னும் தத்தம் பங்குக்கு ஒவ்வொரு கோல்களைப் போட்டுவிட்ட நிலையில் விளையாட்டு மேலும் தூளைக் கிளப்ப ஆரம்பித்தது. கொஸ்டா ரிக்கா வேகமாக அதிரடி விளையாட்டை விளையாடி 2 – 1 ஆக்கியது தனது நிலையை. அடுத்த பக்கமோ ஜப்பானியர் தமது விடாமுயற்சியைக் காட்டி ஸ்பெய்ன் அணியினரை 2 – 1 என்ற எண்ணிக்கையில் பின் தள்ளினார்கள். ஏற்கனவே புள்ளிகளை அதிகம் பெற்றுவிட்ட ஸ்பெய்ன் அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் என்ற நிலையில் இரண்டாவது அதிக புள்ளிகள் எடுத்திருந்தனர் ஜப்பானியர்கள். ஜேர்மனியோ 6 கோல்களைப் போட்டால்தான் அடுத்த கட்டத்துக்குக் கடக்கலாம் என்ற நிலைமை.

கொஸ்டா ரிக்கா அணியினருக்கு ஜேர்மனியை வென்றுவிடவேண்டும் என்ற தவிப்பு. மிச்சமிருந்ததோ சுமார் 20  நிமிடங்களே. கடந்து போன 2018 போல இம்முறையும் 16 அணி விளையாட்டுக்குள் நுழைய முடியாமல் நாடு திரும்பலாகாது என்ற கௌரவப் பிரச்சினை வேறு ஜேர்மனியைப் பிடித்தாட்டியது. துரிதத்தை அதிகமாக்கி ஜேர்மனியால் 4 – 2 ஆல் வெற்றியைப் பிடிக்க முடிந்தது. ஆனால், அடுத்த கட்டத்துக்கு முன்னேற அந்த வெற்றி இடைவெளி போதாததால் பெட்டிகளைக் கட்டுகிறார்கள் நாடு திரும்ப.

பெரும் மகிழ்ச்சியால் ஜப்பானிய அணியினர் துள்ளிக் குதிக்கிறார்கள். அவர்களுடைய அணியும் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *