ஆபிரிக்க நாடுகளுக்கிடையிலான உதைபந்தாட்டக் கிண்ணப் போட்டிகள் மீண்டும் நிறுத்தப்படலாம்!

கமரூனில் நடக்கவிருக்கின்றன ஆபிரிக்காக் கண்டத்தின் உதைபந்தாட்டப் போட்டிகள். ஜனவரி 09 இல் ஆரம்பித்து பெப்ரவரி 06 இல் அப்போட்டிகள் முடிவடையும். கடந்த வருடத்துக்கான போட்டிகள் கொவிட் தொற்றுப் பயத்தினால் ஒத்திப்போடப்பட்டிருந்தன.

மீண்டும் சமீப வாரங்களில் உலகெங்கும் அதிகரித்துவரும் கொவிட் 19 தொற்றுக்களால் கமரூனில் நடக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் மோதல்கள் நடக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஐரோப்பிய உதைபந்தாட்டக் குழுக்களின் சம்மேளனம் தம்மிடம் விளையாடும் ஆபிரிக்காவின் வீரர்களை அப்போட்டிகளில் பங்குபற்றாமல் தடுக்க யோசித்து வருவதே காரணமாகும்.

தமது உதைபந்தாட்ட வீரர்கள் ஆபிரிக்கப் போட்டிகளில் பங்குபற்றித் திரும்பும்போது ஏற்படும் தனிப்படுத்தல் காலம், அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டால் ஓய்வுக்காலம் ஆகியவைகளால் தமது குழுக்கள் திட்டமிட்டிருக்கும் போட்டிகளில் அவர்கள் பங்குபற்ற இயலாமல் போகலாம் என்று கவலைப்படுகின்றன ஐரோப்பிய உதைபந்தாட்டக் குழுக்கள்.

முஹம்மது சாலே, சாடியோ மானே, அச்ரப் ஹக்கீமி, இட்ரிஸா கானா குயே, ரியாட் மஹ்ரேஸ் ஆகியோர் ஐரோப்பிய குழுக்களில் விளையாடும் முக்கிய வீரர்களாகும். 

சர்வதேச உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் சட்டக்கட்டுப்பாடுகளின்படி குறிப்பிட்ட வீரர் தனது நாட்டுக்காகச் சர்வதேசப் போட்டிகளில் விளையாடிவிட்டுத் திரும்பும்போது 5 நாட்களுக்கு மேலாகத் தனிமைப்படுத்தல் கட்டாயம் இருக்குமானால் அவரை அனுப்ப மறுக்கலாம். 

ஆபிரிக்க உதைபந்தாட்டச் சம்மேளனம் தமது வீரர்களின் உடல் நலம் பற்றிய விடயங்களை எப்படிக் கையாள்வார்கள் என்பது பற்றிய விபரங்களை இதுவரை தமக்கு அறிவிக்கவில்லை என்று ஐரோப்பிய உதைபந்தாட்டக் குழுக்களின் சம்மேளனம் குறிப்பிட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்