25 வருடங்களில், மிக அதிகமான அளவில் பத்திரிகையாளர்கள் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

“எல்லை இல்லாத பத்திரிகையாளர்கள்” அமைப்பு சர்வதேச அளவில் பத்திரிகையாளர்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் கணக்கிட்டு வெளியிட ஆரம்பித்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு இவ்வருடம் பலர் சிறையிடப்பட்டிருக்கிறார்கள். சுமார் 488 ஊடகவியலாளர்கள் உலகமெங்கும் சிறையிடப்பட்டிருக்கிறார்கள் என்கிறது அந்த அமைப்பின் வருடாந்தர அறிக்கை.

அதேசமயம் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. 46 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்களே அதற்கான காரணம் என்று அவ்வமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

சிறைவைக்கப்பட்டிருக்கும் பெண் ஊடகவியலாளர்கள் எண்ணிக்கை 2020 உடன் ஒப்பிடும்போது 60 பேரால் அதிகரித்திருக்கிறது. மொத்தமாகச் சிறைவைக்கப்பட்டிருக்கிறவர்கள் எண்ணிக்கை 20 விகிதத்தால் அதிகரித்திருக்கிறது. மியான்மார், ஹொங்கொங், பெலாருஸ் ஆகிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாறுதல்களே அதற்கான காரணம்.

சீனாவில் 127, மியான்மாரில் 53, வியட்நாமில் 43, பெலாரூஸில் 32, சவூதி அரேபியாவில் 31 ஊடகவியலாளர்கள் சிறையிலிருக்கிறார்கள். சிரியா, ஈராக், யேமன் ஆகிய நாடுகளில் சிறைவைக்கப்பட்டிருக்கும் பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

கொல்லப்பட்டவர்கள் 46 பேரில் 65 % குறிவைத்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மெக்ஸிகோ, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலேயே பெரும்பாலான கொலைகள் நடந்திருக்கின்றன. அவர்களைத் தவிர 65 ஊடகவியலாளர்கள் பணயக்கைதிகளாகவும் இருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்