வரவிருக்கும் சூறாவளியை எதிர்நோக்கி, பல்லாயிரக்கணக்கானோரை வேறு இடங்களுக்கு மாற்றுகிறது பிலிப்பைன்ஸ்.

ராய் என்ற பெயரில் வியாழனன்று மாலையில் பிலிப்பைன்ஸின் பாகங்களைத் தாக்கவிருக்கிறது ஒரு கடும் சூறாவளி. தீவுகளாலான நாடான பிலிப்பைன்ஸ் சூறாவளி போன்ற இயற்கைச் சீறல்களுக்கு மிகவும் பலவீனமானது. நாட்டின் மத்திய மற்றும் தென் பகுதிகளில் கரையோரத்தை ஒட்டி வாழும் பல பத்தாயிரக்கணக்கானோரை அங்கிருந்து அரசு தற்காலிகமாக இடம்பெயர வைத்திருக்கிறது.

சூறாவளி நிலப்பகுதியைத் தாக்கும்போது அதன் காற்று வேகம் 165 – 205 கி.மீ ஆக இருக்கலாம் என்று நாட்டின் வானிலை மையம் எச்சரித்திருக்கிறது. சுமார் 7.600 தீவுகளைக் கொண்டிருக்கும் பிலிப்பைன்ஸ் வருடாவருடம் சுமார் 20 இயற்கைப் பேரழிவுகளுக்கு வருடாவருடம் முகம்கொடுப்பதுண்டு. 

நிலப்பிராந்தியத்தைத் தாக்க நெருங்கிக்கொண்டிருக்கும் அந்தச் சூறாவளியால் உயிரிழப்புக்கள் அதிகம் ஏற்படாதிருக்க மீட்புப் படையினர் கடந்த மூன்று நாட்களாகவே மக்களை வேறிடங்களுக்கு மாற்றுவதில் ஈடுபட்டு வருகிறார்கள். கிழக்கு சமார் பிராந்தியத்திலிருந்து மட்டும் சுமார் 30,000 க்கும் அதிகமானோர் மாற்றப்பட்டிருக்கிறார்கள். அப்பிரதேசம் 2013 இல் ஏற்பட்ட சூறாவளியொன்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சாள்ஸ் ஜெ. போமன்