இரவில் நடமாடும்போது தாக்கும் ஒழுக்கக் காவலர்களின் மீது கேரளக் கல்லூரி மாணவர்கள் கொதித்தெழுந்திருக்கிறார்கள்.

இளம் பெண்கள் இரவில் வெளியே நடமாடுதல், தமது ஆண் நண்பர்களுடன் வெளியே உலாவுதல் போன்றவைகள் ஒழுக்கத்துக்கு மாறானவை என்று குறிப்பிட்டு அப்படியானவர்களை விரட்டியும், மிரட்டியும், தாக்கியும் வருகிறது ஒரு கூட்டம். தலைநகரான திருவானந்தபுரம் உட்பட்ட பல நகரங்களில் அப்படியாப் பெண்களும், அவர்களுடன் கூடச்சென்றவர்களும் அவதிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

கேரளாவில் இரவு 9 மணிக்குப் பின்னர் பெண்கள் தாம் வாழும் விடுதிகளை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்பது வழக்கம். அதை எதிர்த்து இவ்வாரம் கேரள உச்ச நீதிமன்றம் குரல் கொடுத்திருக்கிறது. “பெண்களின் பாதுகாப்பு என்று காரணம் காட்டி அவர்களை விடுகளிலிருந்து இரவுகளில் வெளியேற அனுமதிக்காமலிருப்பது ஒரு ஆணாதிக்க நடவடிக்கை,” என்று நீதிமன்றத்தின் அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.

திங்களன்று இரவு அதேபோன்ற நிகழ்ச்சியொன்று கோட்டயம் நகரில் நடந்திருக்கிறது. ஒரு பல்கலைக்கழக மாணவி தனது நண்பருடன் நகரின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சக மாணவி ஒருவரைப் பார்க்கப் போனபோது அவமதிக்கப்பட்டுத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். மூன்று பேர் சேர்ந்து அவள் ஆணொருவருடன் இரவில் நடமாடுவது பற்றித் தவறாகப் பேசியபின் அவர்களைத் தாக்கியதாகப் பொலீசார் குறிப்பிடுகிறார்கள்.

தாக்குதல் நடந்த இடத்துக்கு வந்த பொலீசாரார் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தியிருக்கிறார்கள். தாக்கப்பட்ட மாணவர்களிருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபின் வீட்டுக்கனுப்பப்பட்டார்கள்.

கோட்டயம் நகரிலிருக்கும் C.M.S. College வளாகத்தில் கூடிய மாணவர்கள் நடந்த சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மனிதச் சங்கிலி அமைத்தார்கள்.

“நாம் சாதாரண மனிதர்களாக இரவிலும் பயமின்றி உலாவவேண்டும். இந்த மிருகத்தனமான நடவடிக்கையைக் கண்டிப்பதுடன் இதுபோன்ற சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் எமது ஆதரவைத் தெரிவிக்கிறோம்,” என்று மாணவர்கள் தலைவியொருவர் கூறினார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *