பண்ணை மிருகங்களின் ஏப்பங்கள், சிறுநீர் ஆகியவை மீது வரி வசூலிக்கத் திட்டமிடுகிறது நியூசிலாந்து.

இயற்கை அழிவுகளை ஏற்படுத்திவரும் காலநிலை மாற்றங்களுக்குக் காரணமாகப் பண்ணைகளில் வளர்க்கப்படும் விலங்குகள் வெளியேற்றும் எச்சங்களும் இருந்து வருகின்றன. அதனால் பண்ணைகள் பெரும்பாலாக இருக்கும் நியூசிலாந்து தனது நாட்டின் பசுக்கள், ஆடுகள் வெளியேற்றும் சிறுநீர், ஏப்பம், குசு போன்றவை மீது வரி விதிக்கப்போகிறது. இப்படியான வரியொன்றை அறிமுகப்படுத்தும் முதலாவது நாடு நியூசிலாந்தாகும்.  நாட்டின் விவசாயிகள் தமது அரசின் நகர்வுக்கு எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள்.

பண்ணை மிருகங்களின் சிறுநீர் மூலம் வெளியாகும் நிட்ரியஸ் ஒக்சைட், ஏப்பம், குசு மூலம் வெளியாகும் மீத்தேன் வாயு போன்றவை சூழலைப் பாதிக்கும் வாயுக்களில் முக்கியமானவையாகும். 5 மில்லியன் மக்களைக் கொண்ட நியூசிலாந்தில் 10 மில்லியன் மாடுகள் இறைச்சி, பால் போன்றவைக்காக வளர்க்கப்படுகின்றன. ஆடுகளின் எண்ணிக்கை சுமார் 26 மில்லியன் ஆகும். 

2025 ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தவிருக்கும் அவ்வரியை எதிர்கொள்ள விவசாயிகள் தமது தயாரிப்புக்களைச் சூழலுக்குப் பாதிப்பு அதிகம் ஏற்படுத்தாதவையாக மாற்றிக்கொள்ளும் ஏற்பாடுகளை இப்போதிருந்தே ஆரம்பிக்கலாம் என்கிறது அரசு. 

நியூசிலாந்திலிருந்து வெளியாகும் நச்சுக்காற்றில் பாதியை நாட்டின் விவசாயத்துறையே உண்டாக்குகிறது. நாட்டின் மொத்தத் தயாரிப்பில் முக்கிய பங்காக விளங்கும் விவசாயத்துறை உண்டாக்கும் சூழல் பாதிப்புக்காக  இதுவரை வரிவிதிக்கப்பட்டதில்லை. அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த வரியானது நியூசிலாந்தின் விவசாயிகளை உலகுக்கான மிகச்சிறந்த விவசாய்களாகும் என்கிறார் பிரதமர் யசிந்தா ஆர்டென்.

சூழலுக்குப் பாதகமான வாயுகளை வெளியேற்றுவதை 2050 நிறுத்திவிடுவதாக நியூசிலாந்து அரசு உறுதிபூண்டிருக்கிறது. அத்திட்டத்தில் ஒரு பகுதி நாட்டின் பண்ணை விலங்குகள் வெளியிடும் மீத்தேன் வாயுவின் அளவை 2030 இல் 10 விகிதத்தாலும், 2047 இல் 47 விகிதத்தாலும் குறைப்பதாகும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *