மழை, வெள்ளம் ஆஸ்ரேலியாவின் பாகங்களை மீண்டும் முடமாக்கியிருக்கின்றன. 

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தென்பகுதி, தாஸ்மானியா, விக்டோரியா மாநிலத்தின் பெரும்பாகங்கள் ஓரிரண்டு நாட்களாக அங்கே ஏற்பட்ட மழைவீழ்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அப்பிராந்தியங்களின் பகுதிகளில் ஒரு மாதத்தில் பெய்யக்கூடிய மழை ஒரே நாளில் பெய்திருப்பதால் ஏரிகள், அணைகள் நிறைந்துவிட்டிருக்கின்றன. வெள்ளப்பெருக்கை எதிர்பார்க்கும் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை வேறு பாதுகாப்பான இடங்களுக்குப் போகும்படி உள்ளூர் அதிகாரங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றன. 

விக்டோரியா மாநிலம் ஆஸ்ரேலியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகையைக் கொண்டதாகும். நாட்டின் மற்றப் பகுதிகளை விட இந்தப் பிராந்தியம் வெள்ளத்தால் பாதிக்கப்படுவது குறைவே. ஏரிகளில் நீர்மட்டம் நிறைந்து உயரம் குறைவான இடங்களை நாடி நீர்வெள்ளம் பாய்ந்துகொண்டிருக்கிறது. தொடர்ந்தும் நீர்மட்டம் அதிகரிப்பதால் வெள்ளத்தின் தீவிரம் அதிகரிகரிக்கவே வாய்ப்பிருப்பதாக மீட்புப் பணியினர் மக்களை எச்சரித்து வருகிறார்கள்.

முழங்காலுக்கும் அதிக உயரமான நீரில் தப்பியோடும் மக்கள், அவர்களைச் சிறு படகுகளில் ஏற்றிப் பாதுகாக்கும் மீட்புப் படையினரின் படங்கள் சமூகவலைத்தளங்களில் உலாவுகின்றன. நாட்டின் அதிக மக்களைக் கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் சிட்னிக்கு வெளியே சுமார் 340 கி,மீ தொலைவிலுள்ள நகரொன்றில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைத் தங்கவைக்கும் இடமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. 

ஆஸ்ரேலியாவின் கிழக்குக் கடற்கரைப் பிராந்தியங்கள் சுமார் இரண்டு வருடங்களாக மீண்டும், மீண்டும் கடும் மழையாலும், வெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்டு வருகிறது. காலநிலையை அளக்கத் தொடங்கிய காலத்திலிருந்து ஈரமான வருடத்தை சிட்னி இவ்வருடம் அனுபவித்து வருகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *