நியூசிலாந்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியவன் காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மது சம்ஸுதீன் அஹமட் ஆடில் என்பவனே.

இலங்கையைச் சேர்ந்த முஹம்மது சம்ஸுதீன் அஹமட் ஆடில் என்ற 32 வயதானவனே நியூசிலாந்தின் ஒக்லன்ட் நகரில் உள்ள LynnMall நவீன சந்தைத் தொகுதியில் அமைந்துள்ள Countdown வர்த்தக மையத்தில் வெள்ளியன்று பிற்பகல் ஆறு பேரைக் கத்தியால் குத்திப் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவனாகும். இவன் இஸ்லாமியக் காலிபாத் அமைப்பின் ஆதரவாளன் என்று நியூசிலாந்து பொலீஸார் விசாரணையிலிருந்து தெரியவருகிறது.

காத்தான்குடி முதலாம் குறிச்சி கபுரடி வீதியைச் சேர்ந்த அஹ்மட் ஆடில் (Ahamed Aathill) கொழும்பு, பம்பலப்பிட்டி  இந்துக் கல்லூரியில் A/L 2008 பிரிவில் உயர்தரம் கற்றவன் ஆவான். இவனது பெற்றோர் கனடாவில் வசிப்பதாக அறிய முடிகின்றது. ஒரு சகோதரர் தற்பொழுது கொழும்பில் வசிக்கின்றார்.

வன்முறையைத் தூண்டும் படங்கள், ஆவணங்கள், வீடியோக்களை தன்வசம் வைத்திருந்தமை, ஆபத்து விளைவிக்கும் ஆயுதமொன்றை வைத்திருந்தமை, இரண்டு பேஸ்புக் கணக்குகள் மூலம் வன்முறை, குண்டுவெடிப்புகள், மரண தண்டனை கொடுத்தல், கொலை செய்தல் போன்ற வன்முறை மற்றும் பயங்கரவாதம் அடங்கிய பதிவுகள், புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றியமை போன்ற குற்றங்களுக்காக 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் கைதுசெய்யப்பட்டு 23 குற்றங்களின் கீழ் ஒக்லன்ட் உயர் நீதிமன்றத்தில் இவனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒக்லன்ட் உயர் நீதிமன்ற நீதிபதி திமோத்தி ப்ரீவர் இவனை 2018 ஆம் ஆண்டு ஜூலை வரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டிருந்தார். உலகில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்கள், வன்முறைகள் தொடர்பாக இவன் கவனம் செலுத்துவதாக இவன் தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் முன்வைக்கப்பட்டு இருந்தது.

தடுப்புக் காவலில் இருந்து விடுதலையான அஹமட் ஆடிலை நியூசிலாந்து உளவுப் பிரிவினர் தொடர்ந்து கண்காணித்து வந்த பொழுதும், அந்த நாட்டின் மனித உரிமை சட்டங்கள் காரணமாக இவனைக் கைது செய்ய அவர்களால் முடியாமல் போயிருந்தது. ISIS கொள்கையில் அஹமட் ஆடிலுக்கு இருந்த ஈடுபாட்டை நியூசிலாந்து பாதுகாப்புத் தரப்பினர் அறிந்தே இருந்தனர். நேற்றைய தினமும் உளவுப் பிரிவினர் அஹமட் ஆடிலை பின்தொடர்ந்தே சென்றுள்ளனர், அதன் காரணமாகவே தாக்குதலை ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே பயங்கரவாதியை சுட்டுக் கொன்று பொதுமக்களை அவர்களால் பாதுகாக்க முடிந்துள்ளது.

குறித்த பயங்கரவாதி நீண்ட காலம் காத்தான்குடியில் வசிக்காத பொழுதும், காத்தான்குடி இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தொட்டிலாக மாறிவருவதாக பலமுறை குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் இலங்கையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலை முன்னின்று நடாத்திய மெளலவி சஹ்ரானும் காத்தான்குடியை சேர்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

[சிறீலங்காவைச் சேர்ந்த ரிஷ்வின் இஸ்மத் மூலம் பெறப்பட்ட தகவல்கள்.]

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *