12 – 15 வயதினருக்கு தடுப்பு மருந்து கொடுக்கும் விடயத்தில் நோர்வே தனது முடிவை மாற்றியிருக்கிறது.

நோர்டிக் நாடுகளிலேயே கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, பக்கத்து நாடுகளுடனான தனது எல்லைகளையும் பெரும்பாலும் மூடியே வைத்திருந்த நோர்வேயில் இதுவரை காணாத அளவில் தொற்றுக்கள் பரவி வருகின்றன. இளவயதினரிடையே கொவிட் 19 பரவ ஆரம்பித்திருப்பதே அதன் காரணம் என்று கணிக்கப்படுகிறது.

கடந்த வாரத்தில் சுமார் 1,500 ஐத் தாண்டியிருந்த கொரோனாத் தொற்றுக்கள் இவ்வார நடுப்பகுதியில் தினசரி 1,795 ஆகியிருக்கின்றன. தற்போதைய நிலைமையில் நோர்டிக் நாடுகளிலேயே விகித அளவில் அதிகமான பரவல் நோர்வேயிலேயே ஏற்படுகிறது. முன்பு பரவியிருந்த கொவிட் 19 கிருமியை விட ஆக்ரோஷமான டெல்டா திரிபே நாட்டில் பரவி வருவதாகக் குறிப்பிடுகிறார் நோர்வேயின் தொற்றுநோய்த் தடுப்புத் திணைக்களத்தின் தலைமை அதிகாரி ப்ரூதே புரூலாந்த் [Frode Forland]. 

சமீபத்தில் அங்கே பாடசாலைகளில் தவணை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த வருடம் பெரும்பாலும் மூடியிருந்தது மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு இடையூறாகியது போல மீண்டும் ஆகக்கூடாது என்ற எண்ணத்தில் நோர்வே தனது 12 -15 வயதினருக்கு ஒரு தடுப்பூசியைக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறது.

முன்பு அந்த வயதினருக்குத் தடுப்பூசி அவசியமில்லை என்று குறிப்பிட்டிருந்தது நோர்வே. தற்போதைய நிலையில் பிள்ளைகளிடையே பரவினாலும் அவர்களுக்குப் பெரிய பாதிப்பை அந்த நோய் ஏற்படுத்தவில்லை என்று குறிப்பிடுகிறார் புரூலாந்த். ஆயினும், அவர்கள் பாடசாலைக்குப் போகாமலிருந்து கல்வியில் பின்தங்கக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *