2025 அளவில் நாட்டின் புகைப்பவர்களை 5 விகிதத்துக்கும் குறைவாக்க நியூசிலாந்தின் நடவடிக்கைகள்.

புகைத்தலின் தீமையை உலகளவில் அறிந்திருந்தாலும் அதை முழுசாக நிறுத்துவதற்கு எந்த நாடும் முயற்சித்ததில்லை. நியூசிலாந்து வரவிருக்கும் வருடத்தில் எடுக்கவிருக்கும் நடவடிக்கை ஒன்றின் முலமாக நீண்டகாலத் திட்டம் ஒன்றின் மூலம் புகைத்தலைப் படிப்படியாக அழிக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறது.

2022 இல் கொண்டுவரப்படவிருக்கும் சட்டமொன்று நியூசிலாந்தில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் புகைப்பதைத் தடைசெய்யும். அந்த வயது எல்லை வருடாவருடம் ஒரு வருடத்தால் அதிகரிக்கப்படும். அதாவது இன்னும் 60 வருடங்களின் பின்னரும் ஒருவர் சிகரட் வாங்க முடியும். ஆனால், அவர்  அப்போது தான் 75 வயதுக்கு அதிகமானவர் என்று நிரூபிக்கவேண்டும். 

குறிப்பிட்ட சட்டத்தின் மூலம் 2025 இல் நியூசிலாந்தில் புகைப்பவர்களின் பங்கு 5 விகிதமாகக் குறைந்துவிடும் என்று அரசு கணித்திருக்கிறது.

14 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே சிகரெட் வாங்கலாம் என்ற சட்டம் அமுல்படுத்தப்படும் அதே சமயம் அதன் நோக்கம் பலப்பட மேலும் சில நடவடிக்கைகளைக் கொண்டுவரவிருக்கிறது நியூசிலாந்து. நாட்டில் விற்கப்படும் சிகரெட்டுகளில் இருக்கும் நிகோடின் அளவு பெருமளவில் குறைக்கப்படும். புகைத்தல் விற்கும் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். 

புகைப்பவர்களின் எண்ணிக்கை பல ஆண்டுகளாகவே நியூசிலாந்தில் குறைந்து வருகிறது. நாட்டின் 11 விகிதமான வயதானவர்களே புகைக்கிறார்கள். அவர்களில் தினசரி புகைப்பவர்களின் விகிதம் ஒன்பது ஆகும். புகைத்தல் நாட்டின் பழங்குடியினரான மாவோரிகளிடையே பரவலாகக் காணப்படுகிறது. அவர்களில் சுமார் 22 விகிதத்தினர் புகைக்கிறார்கள். அவ்வினத்தினரிடையே புகைத்தலைக் குறைப்பதற்காகத் தனியான திட்டங்கள் கொண்டுவரப்படும்.

ஏற்கனவே புகைத்தல் பொருட்கள் மீதான வரி நியூசிலாந்தில் அதிகம். அதை மேலும் உயர்த்துவதாகத் திட்டமில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்