பல ஐரோப்பிய நாடுகள் போலன்றி சுவீடன் 5 – 11 வயதுக்காரருக்குத் தடுப்பு மருந்து இப்போதைக்குக் கொடுக்கப்போவதில்லை.

நவம்பர் மாத இறுதியில் ஐரோப்பாவில் மருந்துகள் பாவிப்பதற்கு அனுமதி கொடுக்கும் அதிகாரம், கொமிர்னாட்டி தடுப்பு மருந்தைக் குறைந்த அளவில் 5 -11 வயதினருக்குக் கொடுக்கலாம் என்று பச்சைக் கொடி காட்டியது. பல ஐரோப்பிய நாடுகளும் அடுத்த வாரத்தில் அதைச் செய்ய ஆரம்பிக்கவிருக்கின்றன.

சுவீடனின் தொற்றுவியாதிகளைத் தடுக்கும் திணைக்களமும், சிறார் மருத்துவர்களும் அதை நடைமுறைப்படுத்தத் தற்போதைக்கு விரும்பவில்லை. அதைச் செய்யும் நாடுகளில் பிள்ளைகளுக்கு அவை எப்படிச் செயற்படுகின்றன என்பதைப் பற்றிய மேலதிக விபரங்களைத் தெரிந்துகொண்ட பின்னரே அதுபற்றிச் சுவீடனில் முடிவு எடுக்கபடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிறார்களுக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னரே அமெரிக்காவில் பச்சைக் கொடி காட்டப்பட்டு அது வேகமாக நடந்தும் வருகிறது. ஐரோப்பாவைப் பொறுத்தவரை டென்மார்க் முதல் நாடாக தனது 5 – 11 வயதினருக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுக்கிறது. ஐக்கிய ராச்சியத்தில் அந்த வயதினருக்கு வரவிருக்கும் இலைதுளிர் காலத்தில் தடுப்பு மருந்து கொடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

சிறுவயதினர் கொவிட் 19 ஆல் தாக்கப்பட்டாலும் அதிகளவில் நோய்க்கு உள்ளாவதில்லை என்பது இதுவரை கவனிக்கப்பட்ட விடயமாகும். அதேசமயம் அவர்களிடையே ஏற்படும் தொற்று மற்றவர்களுக்குப் பரவும் வாய்ப்பு இருக்கிறது என்பது ஒரு பலவீனமாகும். 

சாள்ஸ் ஜெ. போமன்