ஜனவரி நடுப்பகுதியில் தனது உலகம் சுற்றும் பிரயாணத்தை முடித்துக்கொள்ளவிருக்கும் சாரா சீயோலில் இறங்கினார்.

மிகக் குறைய வயதில் தன்னந்தனியே விமானத்தில் உலகைச் சுற்றிவந்தவர் என்ற சாதனையைப் பொறிப்பதற்காக ஆகஸ்ட் மாதத்தில் பெல்ஜியத்தில் தனது பயணத்தை ஆரம்பித்திருந்தார் சாரா ருத்தர்போர்ட். டிசம்பர் 11 ம் திகதியன்று அவர் தனது பயணத்தில் ஆசியாவுக்கு முதன் முதலாக வந்திறங்கியிருக்கிறார்.

ரஷ்யாவில் விளாடிவொஸ்டொக் நகரிலிருந்து புறப்பட்ட அவர் சீயோலில் கிம்போ சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். அங்கே தன்னைச் சந்தித்த பத்திரிகையாளர்களுடன் அவர் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“இது மிகவும் சவாலாக இருக்கிறது. அலாஸ்காவில் நான் விசா, காலநிலை பிரச்சினைகளால் ஒரு மாதம் மாட்டிக்கொண்டேன். அதே போலவே ரஷ்யாவிலும் அதே பிரச்சினைகளால் ஒர் மாதம் என் பிரயாணம் தடைப்பட்டது. நத்தார் சமயத்தில் நாடு திரும்பிவிடுவேன் என்று திட்டமிட்டிருந்தேன். அதென்னவோ நடக்கப்போவதில்லை. ஆனால், இது ஒரு சாகசச்செயல் போலிருக்கிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

“கொரோனாக் கட்டுப்பாடுகளால் நான் விரும்பியபடி பல நகரங்களிலும் சாதாரணமாக வீதிகளில் நடமாட முடியவில்லை. முக்கிய இடங்களையும், அருங்காட்சியகங்களையும் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. ஆனாலும், அவைகளை வானத்திலிருந்து பார்த்து மகிழ்ந்தேன்” என்றும் அவர் சொல்லி மகிழ்ந்தார்.

தனது பயணத்தின் அடுத்த கட்டமாக தாய்வானுக்குப் பறக்கவிருக்கும் சாரா திங்களன்றுவரை ஓய்வெடுப்பார். அவர் தனது பயணம் ஜனவரியின் நடுப்பகுதியில் முடியலாம் என்று கணித்திருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்