கட்டுப்பாட்டின் ஓட்டைகளைப் பாவித்து ரஷ்யாவிலிருந்து எரிபொருள் வாங்கும் ஐரோப்பிய நிறுவனங்கள்.

சில வாரங்களுக்கு முன்னர் ரஷ்ய ஜனாதிபதி புத்தின் “நட்பாக நடக்காத நாடுகள் எங்கள் எரிபொருளுக்கு விலையை ரூபிள் நாணயத்தில் தரவேண்டும்,” என்று அறிவித்திருந்தார். அதை ஏற்க மறுத்த பல்கேரியா, போலந்து ஆகிய நாடுகளுக்குக் கடந்த வாரம் ரஷ்யா தனது எரிவாயுக் குளாய்களை மூடிவிட்டது. எனவே, ரஷ்யாவின் எரிவாயுவில் தங்கியிருக்கும் நாடுகளான ஜெர்மனி, இத்தாலி உட்பட்ட மற்றைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே இனி என்ன நடக்கும் என்ற திகில் ஏற்பட்டிருக்கிறது.

ரஷ்யாவுக்கு எந்த ஒரு ஐரோப்பிய நாடும் ரூபிள் கொடுத்து எரிபொருள் கொள்வனவு செய்யலாகாது என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் வரையறையாகும். ரஷ்யாவுடைய போருக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்ளவும், நாட்டின் நாணயமான ரூபிளின் மதிப்பை விழாமல் கவனிக்கவுமே ரஷ்யா தனக்கு ரூபிளில் பணம் செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. அப்போரை விரைவில் நிறுத்தவேண்டுமானால் ரஷ்யாவின் பொருளாதாரத்தை வீழ்த்தவேண்டும் என்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் திட்டமாகும்.

ரஷ்யாவுக்கு ரூபிளில் கட்டணம் செலுத்தலாகாது என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் ஒரு ஓட்டையை உண்டாக்கவும் ரஷ்யா வழி செய்திருக்கிறது. அது ரஷ்ய காஸ்புரோம் வங்கியில் எவ்ரோ மூலம் கட்டணம் செலுத்தி எரிபொருள் கொள்வனவைச் செய்வதாகும். அந்த எவ்ரோவை காஸ்புரோம் வங்கியே ரூபிளுக்கு மாற்றிக்கொள்ளும். 

ஜெர்மனியின் Uniper மற்றும் இத்தாலியின் Eni SpA ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் காஸ்புரோம் வங்கியில் கணக்குகளைத் திறந்து எவ்ரோவில் ரஷ்யாவின் எரிவாயுவுக்காக விலை கொடுப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அந்த எவ்ரோக்களை காஸ்புரோம் வங்கியே ரூபிளுக்கு மாற்றிக்கொள்ளும். அதன்மூலம் ஐரோப்பிய நிறுவனங்கள் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டை மீறாமல் நடந்துகொள்வதாகக் கணிக்கப்படும்.

ஏற்பட்டிருக்கும் நிலைமையை எதிர்கொள்ள வேண்டுமானால் ஐரோப்பிய நாடுகள் எல்லோரும் ஒன்றிணைந்து தம்மிடமிருக்கும் எரிபொருளைச் சக அங்கத்துவர்களுடன் பகிர்ந்துகொள்ள முன்வரவேண்டும் என்று ஒன்றியத்தின் சார்பில் உற்சாகப்படுத்தப்படுகிறது. போலந்தும், ஜேர்மனியும் தம்மிடையே அத்தகைய திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. போலந்து தன்னிடமிருக்கும் எரிபொருள் குளாய்களை ஜேர்மனி பாவிப்பதற்கு அனுமதித்திருக்கின்றன. அதைத் தண்டிக்கவே ரஷ்யா போலந்துக்குக் கொடுத்துவந்த எரிவாயுவை நிறுத்தியிருக்கிறது.

ரஷ்யாவால் எரிவாயுக் குளாய் மூடப்பட்ட இன்னொரு நாடு பல்கேரியா. அந்த நாடு நீண்ட காலமாகவே ரஷ்யாவின் நெருங்கிய நண்பராக இருந்து வந்திருக்கிறது. போர் ஆரம்பித்த காலத்திலும் பல்கேரியர்களிடையே ரஷ்யா மீதான ஆதரவே அதிகமாக இருந்தது. ரஷ்ய ஆதரவு அரசே அங்கே நடந்து முடிந்த தேர்தல் வரை ஆட்சியிலிருந்தது. சமீப காலத்தில் அதிலேற்பட்டிருக்கும் மாற்றத்தைத் தண்டிக்கவே தான் நீண்ட காலமாக மலிவு விலைக்கு பல்கேரியாவுக்குக் கொடுத்துவந்த எரிபொருளை நிறுத்தியிருக்கிறது ரஷ்யா என்று ஊகிக்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *