எரிவாயு வேட்டையில் அகப்பட்ட நாடுகளிலெல்லாம் ஒப்பந்தங்கள் செய்துகொள்கிறது இத்தாலி.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அல்ஜீரியாவிடமிருந்து எரிவாயு வாங்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இத்தாலியின் எரிபொருள் வேட்டை தொடர்கிறது. தற்போது சுமார் 40 % எரிவாயுவுக் கொள்வனவுக்காக ரஷ்யாவிடம் தங்கியிருக்கும் நாடு இத்தாலி. அல்ஜீரியாவில் செய்துகொண்ட ஒப்பந்தப்படி கிடைக்கும் எரிவாயு நாட்டின் தேவையை நிறைவேற்றப் போதாது என்பதால் வேறு நாடுகளை நாடிச் சென்றிருக்கிறார் வெளிவிவகார அமைச்சர் லூஜியோ டி மாயோ.

கொங்கோ, கத்தார், அங்கோலா ஆகிய நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்துவதில் டி மாயோ ஈடுபட்டிருக்கிறார். கத்தாருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின்படி எவ்வளவு திரவ எரிவாயு கிடைக்கும் என்பது இன்னும் முடிவாகத் தெரியாத நிலையில் கொங்கோ, அங்கோலா ஆகிய நாடுகளிடம் கொள்வனவு செய்வதில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ரூபிளில் தன்னிடம் கொள்வனவு செய்யும் எரிவாயுவுக்குக் கட்டணம் தரவேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கை இத்தாலியின் மீது மேலும் அழுத்ததைக் கொடுத்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே பிளவு ஏற்படாமல் ஒருமுகமாக ரஷ்யாவிடம் எரிபொருள் கொள்வனவை நிறுத்தவேண்டும் என்ற கோட்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் செயற்பட்டு வருகின்றன. எனவே, இத்தாலியும் அந்த வரிசையில் சேர்ந்துகொள்வது அவசியமாகியிருக்கிறது.

அங்கோலா, கொங்கோ போன்ற நாடுகளில் எரிவாயுக் கொள்வனவு செய்யும் ஒப்பந்தங்களில் அந்தந்த நாடுகளின் எரிவாயுத் தயாரிப்புக்கான முதலீடுகளுக்கு இத்தாலி உதவவேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில் வேகமாக எரிவாயுக் கொள்வனவே முன்னிலைப்படுத்தப்படுகிறது என்பதால் இத்தாலிய அரசு நீர், சூரிய ஒளி, காற்று போன்ற இயற்கை வளங்களிலிருந்து சூழலைப் பாதிக்காத வகையில் எரிசக்தியை உற்பத்தி செய்யும் முதலீடுகளில் பின்தங்கிவிட்டதாக விமரசனம் எழுந்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *