கொவிட் 19 ஆல் இரண்டு வருடங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 மில்லியன் பேர்.

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு கொவிட் 19 பரவ ஆரம்பித்த முதலிரண்டு வருடங்களில் அத்தொற்றுவியாதியினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 13.3 மில்லியன் முதல் 16.6 மில்லியன் பேர் என்று குறிப்பிட்டிருக்கிறது. இது 2020 ஜனவரி முதல் 2021 டிசம்பர் வரை இறந்தவர்களின் எண்ணிக்கையாகும்.

இந்தத் தொகை நாடுகளால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வமான இலக்கங்களை விட இரண்டு மடங்கானது. கொவிட் 19 ஆல் தொற்றி அதனால் தான் இறந்தவர்கள் மட்டுமன்றி அதன் பக்கவிளைவுகள் அல்லது அதற்கான மருத்துவ சேவை வசதியின்றி வெவ்வேறு காரணமாக இறந்தவர்களும் இதிலடங்குவர்.

இந்தத் தொகையானது உலக நாடுகளின் சராசரி வருடாந்தர இறப்புகளுடன் குறிப்பிட்ட இரண்டு வருடங்களில் இறந்ததாக நாடுகளின் பிராந்தியங்களிலிருந்து வெளியான இலக்கங்களையும் ஒப்பிட்டுப் பெறப்பட்டிருப்பதாக உலக மக்கள் ஆரோக்கிய அமைப்புத் தெரிவித்திருக்கிறது. அதாவது இந்த இலக்கம் வெளியிடப்பட்ட இலக்கங்களைத் தவிரக் கணிப்பீட்டுத் தகவல்களையும் இணைத்துப் பெறப்பட்டதாகும்.

2021 ம் ஆண்டுக் கடைசிவரை 14.9 மில்லியன் மேலதிகள் இறப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றில் 68 % இறப்புக்கள் பத்து நாடுகளில் மட்டும் ஏற்பட்டவையாகும். மூன்றில் ஒரு பங்கு இறப்புக்கள் இந்தியாவில் மட்டும் நடந்திருக்கின்றன. ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா அகியவைகளிலேயே 86 % மேலதிக கொவிட் 19 இறப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் தலைமை மேலாளர் தெட்ரோஸ் அட்னம் கபிரியேசுஸ் இந்த இலக்கங்கள் பற்றிய தனது கருத்துக்களைத் தெர்விக்கும்போது, “அதிர்ச்சியளிக்கும் இந்த விபரங்கள் எங்களுக்கு இந்தப் பெருந்தொற்றின் விளைவுகளை மட்டும் தெரிவிக்கவில்லை. உலக நாடுகள் எல்லாமே தமது மக்கள் ஆரோக்கியத்துக்கான சேவைகளுக்கு மேலும் அதிகமாகச் செலவிடவேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது,” என்று குறிப்பிட்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *