போரிஸ் ஜோன்சன் மீதான “பார்ட்டிகேட்”, தொழிலாளர் கட்சித் தலைவர் மீது “பியர்கேட்” ஆகித் திருப்பியடிக்கிறது.

ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது சகாக்களுடன் உத்தியோகபூர்வமான அலுவலகத்தில், கொரோனாக் கட்டுப்பாடுகள் பலவற்றை மீறியது பற்றியது வெளியாகித் தொடர்ந்தும் ஒரு சிலுவையாக அவர் அதைச் சுமந்துகொண்டிருக்கிறார். அவரைப் பதவியிலிருந்து வெளியேறவேண்டுமென்று கடுமையாக விமர்சித்தவர்கள் பலர். அவ்விமர்சகர்களில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் கியர் ஸ்டார்மரும் ஒருவராகும். தற்போது அவரும் தனது அலுவலகத்தில் சகாக்களுடன் கட்டுப்பாடுகளை மீறியதாகத் தெரியவந்து பொலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

பார்ட்டிகேட் சம்பவத்தில் பங்குபற்றிய பலருக்குத் தண்டம் விதித்தது பிரிட்டிஷ் பொலீஸ் – வெற்றிநடை (vetrinadai.com)

பிரிட்டனில் கொரோனாக் கட்டுப்பாடுகளின்படி “வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சந்தித்து ஒரே அறைக்குள் உணவருந்துவது தடை” என்று அறிவிக்கப்பட்டிருந்த சமயத்தில் கியர் ஸ்டார்மர் தனது சகாக்களுடன் ஒரு அறைக்குள் பியர் குடித்தபடி, உணவருந்தும் படங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தன. 

குறிப்பிட்ட நாளில் தான் தனது சகாக்களுடன் ஊழியத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், இடையே வேலைகளை நிறுத்திவிட்டுச் சாப்பிடும்போதே அப்படங்கள் எடுக்கப்பட்டிருந்ததாக கியர் ஸ்டார்மர் விளக்கம் தெரிவித்திருந்தார். அத்துடன் அந்த இரவில் எங்கேயும் உணவகங்கள் திறந்திருக்கவில்லை என்றும் அவர் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட நிகழ்வு ஏற்கனவே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது என்பதற்கான ஆவணங்களைத் தினசரி ஒன்று வெளியிட்டிருந்தது. அதையடுத்து அவர் மீது பொலீசார் விசாரணை நடாத்தி வருகிறார்கள்.

மகாராணி எலிசபெத் பாரம்பரியப்படி செவ்வாயன்று பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தனது வருடாந்தர உரையை நிகழ்த்தவிருக்கிறார். வரவிருக்கும் நிதியாண்டில் அரசு எதிர்பார்க்கும் நாட்டு நிலைமை, அதை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றிய விபரங்கள் சுருக்கமாக அப்பேச்சில் வெளியிடப்படும். 

மகாராணியின் உரை வெளியிடப்படவிருப்பதையொட்டி எதிர்க்கட்சியும் தனது நோக்கை அவ்விடயங்களில் வாதிப்பது வழக்கம். கியர் ஸ்டார்மர் திங்களன்று அதுபற்றிப் பங்குபற்றவிருந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிக்கொண்டார். அதற்குக் காரணம் அவர் மீது எழுந்திருக்கும்“பியர்கேட்” குற்றச்சாட்டுகளின் அழுத்தமே என்று குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *