டுருஸ் பிரதமராகிறார். தலையலங்காரத்துடனான இனிப்புப் பண்டத்துடன் நன்றிகூரப்படுகிறார் ஜோன்சன்.

ஸ்கொட்லாந்திற்குச் சென்று மகாராணியின் சம்மதத்துடன் ஐக்கிய ராச்சியத்தின் மூன்றாவது பெண் பிரதமராகப் பதவியேற்கிறார் லிஸ் டுருஸ். பிரிட்டிஷ் அரசு என்ற கப்பல், பல தொழில்துறைகளிலும் நடந்துவரும் வேலைநிறுத்தங்கள், கொள்வனவுப் பொருட்களின் விலையேற்றம், பணவீக்கம், 80 விகிதத்தால் அதிகரித்துவிட்ட மின்சாரத்தின் விலை, பிரெக்ஸிட் ஒப்பந்தப் பிரச்சினைகள்,  ஆங்கிலக்கால்வாய் வழிவரும் அகதிகளின் அதிகரிப்பு போன்ற தள்ளிப்போடமுடியாத பல சூறாவளிகளை ஒரே நேரத்தில் எதிர்நோக்கியிருக்கிறது. சுக்கானைப் பிடித்திருக்கும் புதிய பிரதமர் அவற்றை எப்படிச் சமாளிக்கப்போகிறார் என்பதிலேயே அவரது எதிர்காலம் தங்கியிருக்கிறது.

பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஜோன்சன் தனது கடைசி உரையில் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கெல்லாம் நன்றி கூறினார். தான் பிரதமராகப் பதவியேற்றதன் காரணங்களில் பெரும்பாலானவையை தான் நிறைவேற்றியிருப்பதாகப் பட்டியலிட்டுக் காட்டினார். புதிய பிரதமருக்குத் தனது முழு ஆதரவையும் நல்கி ஆதரிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார். 

சமீபத்தில் கொன்சர்வடிவ் கட்சியின் தலைவர் தேர்தல் நடந்த சமயத்தில் கட்சியினரிடையே ஜோன்சனுக்கான ஆதரவு பற்றியும் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கட்சியின் பாதிப்பங்கினர் தொடர்ந்து ஜோன்சனையே தமது பிரதமராகக் காணவிருக்கிறார்கள். பாராளுமன்றத்தின் சாதாரண உறுப்பினராக வாங்கில் இருக்கப்போகும் அவர் பின்னணியிலிருந்து தொடர்ந்தும் அரசியலில் தனது கைகளின் பலத்தைக் காட்டுவார் என்று பலரும் கணிக்கிறார்கள். தனக்கான ஆதரவை மீண்டும் கட்சிக்குள் பலப்படுத்திக்கொண்டு சமயம் வரும்போது மீண்டும் அவர் பிரதமர் பதவியைக் கைப்பற்றுவார் என்றும் ஆருடம் கூறப்படுகிறது.

பிரிட்டனுக்கு வெளியே போரிஸ் ஜோன்சன் பலமான ஆதரவைப் பெற்றிருக்கும் நாடு உக்ரேன் ஆகும். ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போர் ஆரம்பித்த சமயத்திலிருந்து உக்ரேனுக்குத் தனது முழு ஆதரவையும் தெரிவித்த சர்வதேச அரசியல்வாதிகளில் முக்கியமானவர் ஜோன்சன் எனலாம். முழுமனதுடன் உக்ரேனுக்கு ஆயுதங்கள், நிதி உட்படப் பல வழிகளிலும் உதவியது ஜோன்சனின் பிரிட்டிஷ் அரசு. உக்ரேனுக்கு அவ்வுதவிகளை வழங்கியவர்களில் முதலிடத்தில் இருப்பது ஐக்கிய ராச்சியமே.

 ஜோன்சனின் தமக்குத் தந்த ஆதரவை நன்றியுடன் “Johnsonjuk” [ஜோன்சன்யூக்] என்ற இனிப்புபண்டத்தை வடிவமைத்ததன் மூலம் நினைவுகூருகிறது உக்ரேன் தலைநகரிலிருக்கும் வெதுப்பகமொன்று. மிகவும் பிரபலமாகியிருக்கும் அந்த இனிப்புப் பண்டம் ஜோன்சனின் தலையலங்காரத்தை நினைவில் வைத்து வடிவமைக்கப்பட்டது. ஒடெஸ்ஸா நகரில் ஜோன்சனின் பெயருடன் ஒரு வீதியும் திறந்துவைக்கப்பட்டிருக்கிறது. அந்த நகரிலும் அவரது ஞாபகத்தைக் கொண்டுவரும் இனிப்புப்பண்டம் வெதுப்பகங்களில் பிரபலமாக விற்கப்படுகிறது.

புதிய பிரதமர் டுருஸ் தொடர்ந்தும் உக்ரேனுக்கான ஆதரவை வழங்குவார் என்று அந்த நாட்டினர் எதிர்பார்க்கிறார்கள். அவரது நீல நிரச்சட்டையை நினைவுபடுத்தும் விதமாக டுருசென்கோ என்ற பெயரில் புளூபெரியால் செய்யப்பட்ட ஒரு இனிப்புப் பண்டமும் ஜோன்சன்யூக்குப் பக்கத்தில் விற்பனைக்கு வந்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *