டிரம்ப் கேட்டுக்கொண்டபடி பிரத்தியேக வழக்கறிஞர் மூலம் அவர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆராய நீதிமன்றம் உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன் மீது நாட்டின் குற்றவியல் அதிகாரம் [FBI] ஆரம்பித்திருந்த விசாரணையை இழுத்தடிக்க வழி செய்துகொண்டார். சமீபத்தில் அவரது வீட்டில் அதிகாரிகள் நடத்திய தேடுதலில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான “இரகசியம்” என்று குறிப்பிடப்பட்ட கோப்புக்களை அவர் வைத்திருந்தது தவறு என்று அமெரிக்க அரசின் ஆவணப்பொறுப்பு அதிகாரம் குறிப்பிடுகிறது. அவைகளை அவர் சொந்த வீட்டுக்கு எடுத்துச்செல்ல அதிகாரமில்லை, அவைகள் பாதுகாப்பாக இருக்கவில்லை போன்ற குற்றங்கள் டிரம்ப் மீது சாட்டப்பட்டு வருகின்றன.

நாட்டின் நீதித்துறை தனது வீட்டிலிருந்து எடுத்துச்சென்ற கோப்புகளை ஆராயக்கூடாது, அதற்காகத் தனியான ஒரு வழக்கறிஞரை நியமிக்கவேண்டும் என்று டிரம்ப் சார்பில் கோரப்பட்டது. அமெரிக்க நீதியமைச்சு ஏற்கனவே அந்தக் கோப்புகளை ஆராந்து அவைகளின் விபரங்களை ஓரளவு வெளிப்படுத்தியும் விட்டது. ஆனாலும் கூட அவைகளை ஆராய நீதியமைச்சுக்கு வெளியேயான பிரத்தியேக வழக்கறிஞர் நியமிக்கப்படவேண்டும் என்ற டிரம்ப்பின் கோரிக்கையை புளோரிடா நீதிமன்றம் ஒன்று அனுமதித்திருக்கிறது. 

நீதிமன்றத்தின் முடிவு  நீதியமைச்சின் சார்பில் மேன்முறையீட்டுக்கு அனுப்பப்படலாம். அது வேறொரு முடிவை எடுக்க வாய்ப்புள்ளது. புளோரிடா நீதிமன்றத்தின் சார்பில் முடிவெடுத்த நீதிபதி முன்னா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒருவர் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. எப்படியானாலும் டிரம்ப் தான் விரும்பியபடி தன் மீதான விசாரணையைத் தள்ளிவைப்பதில் வெற்றிபெற்றிருக்கிறார்.

ஓரிரு மாதங்களில் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தேதல்கள், செனட் சபை அங்கத்துவர்களுக்கான தேர்தல்களை அடுத்து டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என்று கருதப்படுகிறது. அரசியல் மன்றத்துக்கோ, ஜனாதிபதியாகவோ போட்டியிடுகிறவர்கள் மீது நீதித்துறை அச்சமயத்தில் விசாரணை நடத்த முடியாது. தன் மீதான விசாரணைகளைத் தள்ளிப் போடுவதன் மூலம் டிரம்ப் தேர்தல் வேட்பாளராகத் தன்னை அறிவித்துக்கொள்ளத் திட்டமிடுகிறார் என்று அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *