தனது இரண்டாவது ரஷ்ய விஜயத்தில் ஜனாதிபதி புத்தினைச் சந்தித்தார் மியான்மார் தலைவர் மின் அவுங் லாயிங்.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்படாத மியான்மாரின் இராணுவ அரசின் தலைவர் மின் அவுங் லாயிங் ரஷ்ய ஜனாதிபதி புத்தினை விளாடிவோஸ்டொக் நகரில் சந்தித்தார். செப்டெம்பர் 03 ம் திகதி முதல் அங்கே ரஷ்யாவால் கிழக்கு நாடுகளுக்கான பொருளாதார மாநாடு [Eastern Economic Forum]நடத்தப்பட்டு வருகிறது. ஜனாதிபதி புத்தினும் நேரடியாகப் பங்கெடுக்கும் அந்தச் சந்திப்புகளின் இடையே மியான்மார் தலைவரையும் புத்தின் சந்தித்துப் பேசினார்.

பெரும்பாலான உலக நாடுகளால் முடக்கங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் ரஷ்யா கூட்டியிருக்கும் அந்த மாநாட்டில் ஆசிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக உதவப்போவதாக ரஷ்யா தெரிவிக்கிறது. ரஷ்யாவை விட மேலும் அதிக நாடுகளின் புறக்கணிப்புக்கு உள்ளாகியிருக்கிறது மியான்மாரின் இராணுவ அரசு.

ஆசிய நாடுகளின் கூட்டுறவு அமைப்பான ஆசியான் மாநாட்டிலும் பங்குபெற மியான்மார் அரசுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. நாட்டில் இராணுவ ஆட்சியை எதிர்த்துவரும் மக்களைக் கொடுமையாக நடத்திவரும் மியான்மார் தலைவரைச் சந்திக்கும் இரண்டாவது உலகத் தலைவர் புத்தின் ஆகும். புத்தினைச் சந்திக்க ஜூலை மாதத்தில் மொஸ்கோவுக்குச் சென்றிருந்த  மின் அவுங் லாயிங்குக்கு அதற்கான நேரம் கொடுக்கப்படவில்லை. சமீபத்தில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் மியான்மாருக்குச் சென்று பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தார். 

ரஷ்யாவும், மியான்மாரும் தமக்கிடையே பொருளாதாரம், வர்த்தகம், சுற்றுலா  இராணுவக் கூட்டுறவு ஆகியவைகளை நிறுவி விஸ்தரிப்பது பற்றி அந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்தாலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எரிபொருள் தேவைக்குத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கும் மியான்மார் அதை ரஷ்யாவிடம் ரூபிள் நாணயத்தில் கொள்வனவு செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நேரடியான விமானப் போக்குவரத்தை ஆரம்பிப்பது பற்றியும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *