தமது ஆதரவைக் காட்ட தாய்வானுக்கு விஜயம் செய்கிறார்கள் பிரெஞ்ச் பாராளுமன்ற உறுப்பினர்கள்.

ஜனநாயக முறையில் ஆளப்படும் தாய்வான் தனது நாட்டின் ஒரு பகுதியே என்று தெளிவாகச் சொல்லி வருகிறது சீனா. அதனால் தாய்வானின் ஜனநாயகத்துக்கும், சுயாட்சிக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாகச் சர்வதேசத்திடம் ஆதரவு கோரி வருகிறது தன்னைத் தனி நாடாகக் கருதும் தாய்வான். அமெரிக்காவும் பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் தமது அரச பிரதிநிதிகளை தாய்வானுக்கு அனுப்புவதன் மூலம் தமது ஆதரவைக் காட்டி வருகிறார்கள்.

சமீபத்தில் அமெரிக்காவின் பாராளுமன்றச் சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் எச்சரிக்கையையும் மீறித்  தாய்வானுக்கு விஜயம் செய்தார். அவர் அங்கிருக்கும் போதும் அதன் பின்னரும் சீனா தனது கரையோரத்திற்கும் தாய்வானின் கரையோரத்துக்கும் நடுவே 1990 களுக்குப் பின்னர் மிகப் பெரிய இராணுவப் பயிற்சியொன்றை நடத்தியது. தாய்வானின் நீர், வான எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து அந்த இராணுவப் பயிற்சியில் மாதிரித் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் பயணிக்கும் அந்தக் கடற்பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டது.

அதையடுத்து அமெரிக்கா தனது பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றைத் தாய்வானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய அனுப்பி வைத்தது. புதனன்று பிரான்ஸிலிருந்து ஐந்து பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று தாய்வானுக்கு விஜயம் செய்திருக்கிறார்கள். இது அங்கே கடந்த 12 மாதங்களுக்குள் விஜயம் செய்யும் 4 வது பிரென்ச் பாராளுமன்ற உறுப்பினர் குழுவாகும் என்று தாய்வானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருக்கிறது.

கடந்த நாட்களில் தாய்வான் தனது இராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகிறது. தரையிலும், கடலிலும் நடந்துவரும் அந்தப் பயிற்சிகளின் நோக்கம் நாட்டின் இராணுவ வீரர்களின் போர்த்திறமையை ஊக்குவிப்பதே என்று தாய்வான் தெரிவிக்கிறது. நாம் போர் எதையும் நாடவில்லை ஆனால் எங்கள் தற்காப்பைத் தளரவிடப்போவதில்லை என்று தாய்வான் அரசு தெரிவிக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *