“தாய்வான் தனி நாடாக முயல்வதைத் தடுக்க சீனா கடைசி வரை போராடியே தீரும்”- சீனப் பாதுகாப்பு அமைச்சர்.

சீனாவின் தாய்வான் அரசியல் நிலைப்பாடு பற்றி விமர்சிக்கும் மேற்கு நாடுகளின் நாடுகளின் விமர்சனங்களுக்கு சவாலுக்குச் சவாலாகப் பதிலளித்திருக்கிறார் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வெய் புங்ஷோ.

“தாய்வான் தன்னைத் தனி நாடாக்கிக் கொள்வதற்கு எந்த நாடாவது உதவி செய்யுமானால் நாம் அதைத் தடுக்கப் போரிடத் தயார். சீனாவைப் பொறுத்தவரை அதைத் தவிர வேறெந்த நிலைப்பாடும் கிடையாது,” என்று சிங்கப்பூரில் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியபின் சூழுரைத்திருக்கிறார் வெய் புங்ஷோ.

ஜனநாயக முறையில் ஆளப்படும் தாய்வான் தனது நாட்டின் ஒரு பகுதியே என்று தெளிவாகச் சொல்லி வருகிறது சீனா. அவர்கள் சீனாவுடன் ஒன்றுபடும் நாளுக்காகக் காத்திருப்பதாகச் சொல்கிறது சீன அரசு. அதற்கு மாறாகத் தாய்வான் எந்த நடவடிக்கை எடுத்தாலும் தாம் அதை முடியடிக்கத் தயாரென்கிறது சீனா. 

“சீனாவின் ஆக்கிரமிப்பு நிலைப்பாடும் அதை நிலைப்படுத்த அவர்கள் தென் சீனக் கடலிலிலும் தாய்வானைச் சுற்றிவரவும் நடத்திவரும் முரட்டுத்தனமான நடவடிக்கைகளும் கண்டனத்துக்கு உரியவை,” என்று அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்ச லொய்ட் ஒஸ்டின் பேட்டியளித்ததுக்குப் பதிலாகவே சீனப் பாதுகாப்பு அமைச்சரின் சவாலான பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சமீப காலத்தில் சீனாவின் இராணுவ விமானங்கள் தாய்வான் தனதென்று கருதும் பிராந்தியத்தின் வான்வெளியில் அத்து மீறிப் பறந்து வருகின்றன. அதைத் தவிர தென்சீனக் கடல் பிராந்தியம் முழுவதுமே தனதென்று குறிப்பிட்டு ஆங்காங்கே இருக்கும் குட்டித் தீவுகளைச் சுற்றி இராணுவத் தளங்களையும் உண்டாக்கியிருக்கிறது சீனா. அதுபற்றி விமர்சித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டைச் சீனா கண்டித்திருக்கிறது. தமது பிராந்தியத்திலிருக்கும் நாடுகளை வளைத்துத் தமது நாட்டுக்கு எதிராக நடக்கவைக்க அமெரிக்க முயல்வதாகச் சீனாவின் கருத்து ஒலிக்கிறது.

சிங்கப்பூரில் நடந்துவரும் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் சுமார் 40 நாடுகள் பங்கெடுத்து வருகின்றன. அவர்களின் சந்திப்புகளின் பின்னர் அப்பிராந்தியத்தில் அமைதியை உண்டாக்கச் சகல நாடுகளும் ஏதாவது நல்ல முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சீனப் பாதுகாப்பு அமைச்சரின் காட்டமான பதிலின் பின்னர் நிலைமை மேலும் பதட்டத்துக்குள்ளாகியிருப்பதாகக் கருதப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *