மரபணு மாற்றப்பட்ட கோதுமைப் பாவிப்பை ஆஸ்ரேலியாவும், நியூசிலாந்தும் ஏற்றுக்கொண்டன.
ஆர்ஜென்ரீன நிறுவனமான Bioceres ஆல் விருத்திசெய்யப்பட்ட மரபணு மாற்றப்பட்ட கோதுமையைப் பாவிப்பதை ஆஸ்ரேலியாவும், நியூசிலாந்தும் உத்தியோகபூர்வமாக அனுமதித்திருக்கின்றன. ஏற்கனவே ஆர்ஜென்ரீனாவும், பிரேசிலும் உலகின் முதலிரண்டு நாடுகளாக அப்பாவிப்பை அனுமதித்திருந்தது.
குறிப்பிட்ட HB4 கோதுமையானது கடுமையான வரட்சிக் காலத்தைத் தாங்குவதுடன் பாவனையிலுள்ள பலமான பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தாங்கும் வல்லமையுள்ளது. உலகின் மிகப்பெரிய கோதுமை ஏற்றுமதியாளர் நாடு ஆர்ஜென்ரீனாவாகும். கடந்த வருட விளைச்சலின்போது என்றுமில்லாத அளவுக்கு அதிகமான 21.8 மில்லியன் தொன் கோதுமையைத் தயாரித்திருக்கிறது.
கோதுமை விவசாய, ஏற்றுமதி நாடுகளான ரஷ்யா, உக்ரேன் ஆகியவையிடையே ஏற்பட்டிருக்கும் போரின் விளைவாக உலகில் கோதுமைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை கணிசமான அளவில் உயர்ந்திருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் நிலைமையை எதிர்கொள்ள மேலும் பல உலக நாடுகள் மரபணு மாற்றப்பட்ட குறிப்பிட்ட கோதுமையைப் பாவிக்க ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்