ஆஸ்ரேலிய நகரங்களில் பெண்கள் வீதிக்கு வந்து தமக்கெதிரான வன்முறையை எதிர்த்துக் குரல்கொடுக்கிறார்கள்.

ஆஸ்ரேலியாவின் தலைநகரான கான்பெரா உட்பட்ட சுமார் 40 நகரங்களிலும், பல கிராமங்களிலும் சுமார் 80,000 பெண்கள் சம உரிமை வேண்டிய ஊர்வலங்களில் பங்குபற்றினார்கள். பெண்களுக்கெதிரான வன்முறை, வன்புணர்வு போன்றவைகளை எதிர்த்தும் அவர்கள் கோஷமிட்டார்கள். 

ஆஸ்ரேலியாவின் முக்கிய கட்சிகளுக்குள்ளே பெண்களை அவமதித்தல், ஒதுக்குதல், வன்புணர்வுகள் நடந்திருப்பவை சமீப காலத்தில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. நாட்டின் நீதியமைச்சர் கிரிஸ்டியன் போர்ட்டர் உயர்கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்தில் 1988 இல் ஒரு 16 வயதுப் பெண்ணை வன்புணர்வு செய்ததாகக் குற்றச்சாட்டு. கட்சி உறுப்பினரொருவரால் வன்புணர்வுக்குள்ளான ஒருவர் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் லிண்டா ரெய்னால்ட்ஸிடம் அதை முறையிட்டபோது அமைச்சர் அதைப் பெரிதாக்காமல் மழுப்பி ஒதுக்கிவிட்டார். 

அத்துடன் தனக்கு நடந்ததை முறையீடு செய்த அந்தச் சக கட்சி உறுப்பினரை “புளுகு மூட்டை,” என்றும் குற்றஞ்சாட்டியிருக்கிறார் லிண்டா ரெய்னால்ட்ஸ். 2019 இல் நடந்த அந்த நிகழ்ச்சிக்காக அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தண்டம் செலுத்தியிருக்கிறார். அமைச்சர்களிருவரும் தற்போது பதவிகளிலிருந்தாலும் உத்தியோகபூர்வமாக சுகவீன விடுமுறை பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.

ஆளும் கட்சிக்குள் மேற்கண்ட நிலைமை இருக்கும்போது எதிர்க்கட்சியான உழைப்பாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடையேயும், கட்சி உறுப்பினர்கள் மட்டத்திலும் பெண்கள் முக்கிய பதவிகளிலிருந்து ஒதுக்கப்பட்டதும், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியமையும் வெளியாகியிருக்கிறது. அதனால் 2019 இல் அக்கட்சிப் பெண் உறுப்பினர்கள் பாராளுமன்ற வேட்பாளராக நிற்கவே தயங்கியது வெளியாகியிருந்தது. 

நீண்ட காலமாகவே இவ்விரண்டு கட்சிகளுக்குள்ளேயும் அமுக்கப்பட்டுப் பொங்கிவந்த கோப நுரையே தற்போது நாடெங்கும் முக்கிய பேசும் விடயமாகியிருக்கிறது. பாரளுமன்றத்து விவாதங்களில் பெண்களின் உரிமைகளை மதிக்காமை, பிரச்சினைகளையெல்லாம் தெரிந்துகொண்டும் கட்சித் தலைமைகள் அவற்றை ஒதுக்கி வைத்தமை பற்றிய விவாதங்கள் பொறிபறக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *