சுவீடன், பின்லாந்து ஆகியவைகள் நாட்டோ அமைப்பில் இணைய துருக்கி எதிர்ப்பு.
இராணுவக் கூட்டமைப்பான நாட்டோவில் ஒரு நாடு இணைவதானால் அதை ஏற்கனவே அந்த அமைப்பின் அங்கத்தவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரால் இதுவரை தாம் பேணிவந்த அணிசேராக் கோட்பாட்டைக் கைவிட்டு நாட்டோவில் சேரத் தயாராகும் நாடுகளான பின்லாந்து, சுவீடன் ஆகியவற்றை அவ்வமைப்பில் சேர்த்துக்கொள்வது தவறான முடிவாகும் என்று துருக்கிய ஜனாதிபதி எர்டகான் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
எர்டகானின் நிலைப்பாடு சமீப வாரங்களில் தான் மாறியிருப்பதாக பின்லாந்து கருத்துத் தெரிவித்திருக்கிறது. ஏப்ரல் 4 ம் திகதி தான் எர்டகானுடன் பின்லாந்தின் நாட்டோ அங்கத்துவ விண்ணப்பம் பற்றிப் பேசியபோது அதை அவர் ஆதரிப்பதாகத் தெரிவித்ததாக அச்சமயத்தில் எர்டகானுக்கு நன்றி சொல்லி டுவீட்டியிருந்தார்.
சுவீடன் தரப்பிலும் எர்டகானின் குறிப்பிட்ட நிலைப்பாடு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் துருக்கிய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்தபோது இதுபற்றியும் கலந்தாலோசித்ததாகவும் அச்சமயத்தில் அவர் சுவீடனின் நாட்டோ விண்ணப்பத்துக்கு ஆதரவாகவே பேசியதாகவும் சுவீடனின் வெளிவிவகார அமைச்சர் ஆன் லிண்டெ குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கனவே நாட்டோவின் அங்கத்துவ நாடாக இருக்கும் நோர்வேயின் பிரதமரும் எர்டகானின் தீடீர்க் கருத்து மாறுபாடு எதிர்பாராத ஒரு திருப்பம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
“இந்த நாடுகள் தீவிரவாத இயக்கங்கள் செயற்படுவதற்கான தளங்களாக இருந்து வருகின்றன. நாம் முன் ஒரு தடவை செய்ய தவறை மீண்டும் செய்ய விரும்பவில்லை,” என்று எர்டகான் குறிப்பிட்டிருக்கிறார். 1952 ம் ஆண்டு துருக்கி தனது எதிரி நாடாகக் கருதும் கிரீஸை நாட்டோ அங்கத்துவராக அங்கீகரித்தது தவறென்பது எர்டகானின் கருத்தாகும்.
குர்தீஷ் தொழிலாளர் கட்சியின் பிரமுகர்கள் PKK சுவீடன், பின்லாந்து நாடுகளில் செயற்பட அனுமதிக்கப்பட்டிருப்பதையே அவர் குறிப்பிட்டிருக்கிறார். அமெரிக்கா, துருக்கி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றால் அவ்வியக்கத்தின் துருக்கிய அமைப்பு தீவிரவாத அமைப்பாகக் கருதப்படுகிறது.
எர்டகான் நேரடியாகத் தான் இவ்விரு நாடுகளின் அங்கத்துவ விண்ணப்பங்களை எதிர்க்கப்போவதாகக் குறிப்பிடவில்லை. எனவே, எர்டகான் வேறு எதையோ இந்தச் சமயத்தில் அரசியல் கைமாறாக எதிர்பார்ப்பதாலேயே இந்தக் கருத்தைக் குறிப்பிட்டிருக்கிறார் என்று அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.
சனியன்று மாலையில் பெர்லின் நகரில் நடக்கவிருக்கும் நாட்டோ நாட்டு வெளிவிவகார அமைச்சர்களின் உத்தியோகபூர்வமற்ற சந்திப்பு ஒன்றில் சுவீடன், பின்லாந்து வெளிவிவகார அமைச்சர்களும் பங்குபற்றவிருக்கிறார்கள். அச்சமயத்தில் துருக்கியின் எதிர்ப்புக்கான காரணம் பற்றி வாதிக்கப்படவிருக்கிறது.
சாள்ஸ் ஜெ.போமன்