இந்தியாவிலிருந்து கோதுமை ஏற்றுமதி செய்தல் உடனடியாக நிறுத்தப்பட உத்தரவு!
உக்ரேன் மீது ஆக்கிரமித்த ரஷ்யா நடத்திவரும் போரால் உலகெங்கும் ஏற்படும் விளைவுகளில் ஒன்று உணவுப்பொருட்களின் விலை உயர்வு ஆகும். தானியவகைகளை ஏற்றுமதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் அவ்விரு நாடுகளின் விவசாயம், ஏற்றுமதி ஆகியவை பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களிடமிருந்து தானியங்களை வாங்கிவந்த நாடுகளில் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டு உலகச் சந்தையில் தானியங்களின் விலையும் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் கோதுமையின் விலை அதிகமாவதைத் தடுக்க கோதுமை ஏற்றுமதியைத் தடைசெய்திருக்கிறது இந்தியா.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 7 மில்லியன் தொன்களால் அதிகரித்திருக்கிறது. 50 விகிதமான இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி பங்களாதேஷுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. உடனடியாக ஏற்றுமதி நிறுத்தப்படவேண்டும் என்று உத்தரவிட்டிருப்பினும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஏற்றுமதியை நிற்பாட்டவில்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தனியார் நிறுவனங்களின் கோதுமை ஏற்றுமதியை அரசு தடை செய்திருக்கும் அதே சமயம் இந்திய அரசு நேரடியாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உணவுப்பற்றாக்குறை உள்ள சில நாடுகளுக்குக் கோதுமை ஏற்றுமதி செய்யும். மொரொக்கோ, துனீசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, லெபனான், துருக்கி, வியட்நாம், அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்கு இந்திய அதிகாரிகள் விஜயம் செய்து நேரடியாக அந்த அரசுகளுடன் கோதுமை ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்களைச் செய்வார்கள்.
2022-2023 நிதியாண்டில் 10 மில்லியன் தொன் கோதுமையை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்