சரித்திரம் காணாத இலாபத்தைப் பெற்றிருக்கிறது “அரம்கோ” நிறுவனம்.
ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்புப் போரின் விளைவால் மிகப்பெரிய இலாபத்தை அடைந்துவரும் நிறுவனங்களில் ஒன்று சவூதி அரேபியாவின் எரிசக்தி நிறுவனமான அரம்கோவாகும். இவ்வருட முதல் காலாண்டு விற்பனையில் அரம்கோ 80 % விகித அதிக இலாபத்தை ஈட்டியிருக்கிறது.
கடந்த வருடம் முதல் காலாண்டில் 21.7 பில்லியன் டொலரை இலாபமாகப் பெற்ற அரம்கோவின் இவ்வருடம் முதல் காலாண்டு இலாபம் 39.5 பில்லியன் டொலராகும். அதற்கான காரணம் கச்சா எண்ணெயின் விலை உலகச் சந்தையில் கணிசமாக உயர்ந்திருப்பதே என்று நிறுவனத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.
கடந்த வருடமும், அதற்கு முந்தைய வருடமும் சர்வதேச ரீதியில் பரவிவந்த கொரோனாத்தொற்றுக்களின் பக்க விளைவால் எண்ணெய்க்கான தேவை குறைந்திருந்தது. ஆனால், அது கடந்த வருடத்தின் நடுப்பகுதியிலிருந்து உயர ஆரம்பித்து விலையும் உயர்ந்தது. இவ்வருட ஆரம்பத்தில் 2021 வருடத்துக்கான இலாபம் 124 % ஆல் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்திருந்தது.
இவ்வருட ஆரம்பத்திலிருந்து கணிசமாக உயர ஆரம்பித்திருந்த கச்சா எண்ணெயின் விலையானது ரஷ்யா – உக்ரேன் போர் ஆரம்பித்ததும் வேகமாக எகிறி பீப்பாய் 139 டொலரைத் தொட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்