நிலைகுலைந்த லெபனானில் நடந்த தேர்தலில் பழம் பெருச்சாளிகள் பலர் மீண்டும் வெற்றி.
ஒரு காலத்தில் மத்திய கிழக்கின் லண்டன் என்று புகழப்பட்ட லெபனான் இன, மத வேறுபாடுகளினாலான அரசியல் இழுபறிகளுக்குள் மாட்டுப்பட்டுப் பெருமளவில் சீரழிந்திருக்கிறது. கஜானாவில் ஏதுமில்லை என்ற நிலையிலும் நாட்டுக்கை காப்பாற்ற ஒரு தீர்வில் ஒன்றுபட மறுத்து வரும் அரசியல்வாதிகளால் இதுவரை அரசு அமைக்க இயலாத நிலையில் ஞாயிறன்று மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.
நாட்டினுள்ளிருக்கும் இன, மத வேறுபாடுகளின் விளைவால் லெபனானில் இஸ்லாத்தின் ஷீயா மார்க்க ஆதரவுள்ள ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானின் பின்னணியுடன் அதிகாரத்தைப் பிடித்திருக்கிறது. சவூதி அரேபியாவின் ஆதரவுடனான சுன்னி முஸ்லீம் அமைப்பின் அரசியல் இன்னொரு பக்கம். கிறீஸ்தவர்கள், டுரூஸ் இனத்தினர் ஆகியோர் வெவ்வேறு பக்கம். இவர்களைத் தவிர நாட்டின் பழைய அரசியல் போட்டிகளை உதறிவிட்டு மறுமலர்ச்சியுடன் ஒரு புதிய நாட்டைக் கட்டியெழுப்பப் புறப்பட்டிருக்கும் இளைய தலைமுறையினரின் அரசியல் கட்சியும் இத் தேர்தலில் போட்டது.
அரசியலில் நீண்டகாலம் அதிகாரத்துடனிருந்தவர்கள் வெவ்வேறு பக்கத்தினரும் தம்மால் முடிந்தவரை மக்களை வாக்குச் சாவடிக்குப் போகாமலிருக்கும்படி தடுத்தார்கள். வாக்காளர் மிரட்டல்கள், வாக்குச் சாவடி உத்தியோகத்தர் மீதான மிரட்டல்களைத் தவிர சவூதி அரேபியாவின் ஆதரவுடனான சுன்னி முஸ்லீம் அமைப்பின் அரசியல் தலைவர்கள் தமது ஆதரவாளர்கள் வாக்குச் சாவடியைப் புறக்கணிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அந்த ஆதரவாளர்கள் பெருமளவில் வாழும் பகுதிகளில் தற்காலிக நீச்சல் குளங்களை நிறுவி நாள் முழுவதும் இலவச உணவு, குடிவகைகளுடன் கொண்டாட்டம் நடத்தினார்கள்.
41 % வாக்காளர்களே வாக்களித்த தேர்தலில் முன்னாள் அரசியல் பெருச்சாளிகளில் ஓரிருவர் தவிர மற்றவர்கள் வெற்றிபெற்றிருக்கிறார்கள். லெபனானின் நாணய மதிப்பு 90 % ஆல் வீழ்ச்சியடைந்திருக்கிறது. நாட்டில் வர்த்தகம், பொருளாதாரம் எதுவுமே ஒழுங்காக இயங்கவில்லை. அதற்கான காரணமாகச் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியோரால் சுட்டிக் காட்டப்பட்ட ஊழல் அரசியல்வாதிகள் மீண்டும் வென்றிருக்கிறார்கள்.
லெபனானின் தேர்தல் முடிவுகள் மீண்டும் பாராளுமன்றத்தில் எவருக்கும் பெரும்பான்மையைக் கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட இதே அரசியல் இழுபறி நிலைமையாலேயே நாட்டில் ஒரு அரசாங்கம் உண்டாக்க முடியாமலிருந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்