இந்தியாவின் தேசிய அரசியல் மைதானத்தை அதிரவைக்கும் வெற்றியை அள்ளியது பாரதிய ஜனதா கட்சி, குஜராத்தில்.

ஒரு பக்கம் ராகுல் காந்தி கட்சியின் தலைமைக் கிரீடத்தை உதறிவிட்டு அரசியல் விடிவு தேடிப் பாதயாத்திரை போய்க்கொண்டிருக்க, அதன் வெளிச்சக்கீற்றே தெரியாமல் குஜராத் மாநிலத்தில் மாபெரும் வெற்றி சூடியிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. 27 வருடங்களாக ஆளும் மாநிலப் பாராளுமன்றத்தின் 186 இடங்களில் 156 ஐக் கைப்பற்றிச் சாதனை செய்திருக்கிறது அக்கட்சி. வாக்கு எண்ணியைப் பொறுத்தவரை 52 % வாக்குகளைப் பெற்று முன்னர் இருந்ததை விட 3 விகிதத்தால் பலமாகியிருக்கிறது.

சமீபத்தில் இந்திரா காந்திக் குடும்பமல்லாத மல்லிகார்ஜுன் கார்கேயைத் தலைவராகத் தெரிவுசெய்த காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்திருப்பது 17 இடங்கள் மட்டுமே. மாநிலத்தில் முதல் தடவையாகப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி 13 % வாக்குகளைப் பெற்று 5 இடங்களை வென்றெடுத்திருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அக்கட்சி குஜராத்தில் பெற்றிருக்கும் வாக்குகளின் விகிதமானது,  இந்தியாவின் தேசிய அரசியலில் தற்போது, இரண்டல்ல, மூன்று கட்சிகள் என்று காட்டுவதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகிறார்கள்.

உலகெங்கும் ஏற்றுமதி செய்யும் பல மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்களைக் கொண்ட குஜராத் பிரதமர் மோடியின் அரசியல் ஆரம்பமாகிய மாநிலமாகும். அங்கே அவர் 13 வருடங்கள் அரசியல் தலைமை வகித்த பின்னரே இந்தியாவின் பிரதமராகினார். அவரது காலத்தில் குஜராத்தின் பொருளாதாரத்திலும், சுபீட்சத்திலும் ஏற்பட்ட வளர்ச்சியே இந்தியாவில் தொடர்ந்தும் பாரதிய ஜனதா ஆட்சி பலமாக இருக்கக் காரணம் என்று கருதப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *