எலிசபெத் மகாராணியில் 70 வருட ஆட்சி பற்றிய கொண்டாட்டங்கள் ஆரம்பித்தன.
மகாராணி எலிசபெத்தின் 70 வருட ஆட்சி நிறைவு விழாக்காலம் ஞாயிறன்று ஆரம்பமாகியது. விண்ட்சர் அரண்மனைக்கு அருகிலேயே மைதானமொன்றில் விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் சினிமாத் துறை உட்பட்ட பல துறைகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் நடுவே மகாராணி தோன்றினார்.
சமீப காலத்தில் பலவிதமான பொது நிகழ்ச்சிகளிலும் மகாராணி பங்கெடுக்காமல் ஒதுக்கி வந்திருக்கிறார். காரணம் அவரது உடல் ஆரோக்கியம் குறைந்திருப்பதும் அவர் நடமாகக் கஷ்டப்படுவதும் ஆகும் என்று அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. ஞாயிறன்று நடந்த முதலாவது விழா நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவர் தானே நடந்து அரச குடும்பத்தினருக்கான இருக்கையில் அமர்ந்தார்.
96 வயதான மகாராணியைப் பாராட்டிப் பேசிய நடிகர் டொம் குரூஸ், “உலகத் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை தனது 70 வருட ஆட்சிக்காலத்தில் சந்தித்திருக்கும் அவரை நான் மிகவும் கௌரவிக்கிறேன். இந்தக் காலத்தில் உலகம் எத்தனையோ மாறுதல்களைச் சந்தித்திருக்கிறது என்று நினைக்கும்போது அவரது முக்கியத்துவம் எமக்குப் புலப்படும்,” என்றார்.
விண்ட்ஸர் குதிரையோட்ட மைதானத்தில் நடக்கும் வருடாந்தர நிகழ்ச்சிகளில் கடந்த 79 வருடங்களாகத் தவறாமல் பங்கெடுத்து வருகிறார் மகாராணி. ஞாயிறன்று ஆரம்பித்த அவரைக் கௌரவிக்கும் விழா நான்கு நாட்களுக்குத் தொடரும்.
சாள்ஸ் ஜெ. போமன்