13 வருடங்களின் பின்னர் இன்று நடைபெறுவதற்குக் குதூகலிக்கலாமா?
மே 18 ஆம் திகதி தொடர்பாகச் சிங்கள மக்கள் மத்தியில் புலிப் பயங்கரவாதத்தினையும், நாட்டைப் பிரிக்கும் முயற்சியையும் முறியடித்த படையினர் போற்றப்படவேண்டும் எனவும், தமிழர்களை இந்நாளை துக்க தினமாகக் கொண்டாட அனுமதிக்கக்கூடாது எனவும் ஒலமிடும் கூட்டங்கள் உள்ளன.
சிறீலங்காவில் முள்ளிவாய்க்கால் குறித்து தாங்கள் அறிந்ததுண்டா? – வெற்றிநடை (vetrinadai.com)
ஆனால், சிறிய ஒரு சார் சிங்களவர்கள், போரில் ஆயிரக்கணக்கான தமிழ் அப்பாவிகள் இறந்துதான் உள்ளனர். அவர்களை நினைவு கூரும் உரிமை தமிழருக்கு உள்ளது என்கின்றனர் மெதுவான குரலில்.
மற்றைய புறத்தில், தமிழரின் தனிநாட்டு முயற்சியும், ”புலிப் பயங்கரவாதம்” உம் முறியடிக்கப்பட்ட நாள் எனக் குதூகலிக்கும் ஒரு கூட்டமும் தமிழர்கள் மத்தியில் உள்ளது.
இன்னொரு சாரார், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் இறந்தவர்கள் நினைவுகூரப்படவேண்டும் என்கின்றனர்.
இந்த சாராருள் பல தரப்பினர் தாம்தான் அந்த நினைவுகூரலைத் தலைமை தாங்க உரிமை உள்ளவர்கள், அதிகாரம் உள்ளவர்கள் என்கின்றனர்!இவைகள் எல்லாம் உண்மையில் எதனை உறுதிப்படுத்துகின்றன?
நாட்டில் தம்மை அரசியல் மேதாவிகள், படைத் துறை வல்லுனர்கள், தேசப்பற்றாளர்கள், இனப்பற்றாளர்கள், சமயப் பொியோர், அது. இது என முண்டியடித்துக் காட்டுவதில் ஈடுபடும் கூட்டங்களும், தனியார்களும் உள்ளனர்.
ஆனால், போர் முடிவுற்று 9 ஆண்டுகள் முடிவடைந்தபோதும், நாட்டில், போர் ஏன் உருவானது, ”புலிப் பயங்கரவாதம்” என ஒரு சாரார் குறிப்பிடுவது ஏன் உருவானது, அதற்கான ”மூலக்காரணம்” (the Root Cause) என்ன என்பதை ஆராய்ந்து அறிந்து, அக்காரணத்தை முழுமையாக எப்படி நீக்குவது என்பது பற்றி எவரும் இன்றைய தினத்திலோ, அல்லது கடந்த 9 ஆண்டுகளாகவோ திறந்த மனத்துடன் பகிரங்கமாகப் பேசவில்லை.
முகநூலைப் பார்த்தீா்களாயின், இந்தப் பல்வேறு தரப்புக்களும், பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கமும், விரும்பமும் அற்றவர்களாகவும், வேறு குறிக்கோள்களைக் கொண்டவர்களாகவும் இருப்பதுதான் தெளிவாகிறது.முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரது கூட்டமும், சிங்க தேரவாத பௌத்தத் தேசியவாதிகளும், மஹிந்த ராஜபக்ஷ தனது நம்பிக்கையானவர்களைக் கொண்டு நியமித்திருந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) அறிக்கையை ஏற்கமுடியாது என்றுவிட்டனர்!
அதற்குக் காரணம், அல்லது காரணங்கள் எவை?
அதற்குக் குறைந்தது இரண்டு மிக முக்கிய காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று அந்த அறிக்கையின் பந்தி – 8.150 ஆனது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கான மூலக் காரணத்தினைப் (the Root Cause) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது, அது முழுமையாக நீக்கப்பட பல விடயங்களை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளது:
“The Commission takes the view that the root cause of the ethnic conflict in Sri Lanka lies in the failure of successive Governments to address the genuine grievances of the Tamil people.The country may not have been confronted with a violent separatist agenda, if the political consensus at the time of independence had been sustained and if policies had been implemented to build up and strengthen the confidence of the minorities around the system which had gained a reasonable measure of acceptance.”
ஆனால், வியப்பானது என்னவென்றால், இன்றுவரை, சிங்கள, தமிழ் அரசியல்வாதிகளோ, அல்லது ஊடகவியலாளர்களோ, அல்லது கற்றோர் எனப்படுபவா்களோ, நல்லிணக்க ஆணைக் குழுவானது கூறியிருப்பது பற்றி வாயைத் திறக்கவில்லை, அது பற்றி ஆராயவில்லை!!
தனிநாடு அமைப்பதை நிராகரிக்கும் சமஷ்டிக் கொள்கையுடைய தமிழரசுக் கட்சியை 1949ஆம் ஆண்டு டிசெம்பரில் செல்வநாயத்துடன் உருவாக்கிய கிறீஸ்தவ மருத்துவர் E.M.V. Naganathan என்பவரின் மகளும், செல்வநாயகத்தின் மகனான சந்திரகாசனைத் திருமணம் செய்த பெரும் சட்டக் கல்வியாளர் எனப் புகழப்படுபவரும், இலங்கையில் அண்மையில் வெளியிடப்பட்ட தனது ஒரு ஆங்கில கட்டுரையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினது பந்தி – 8.150இனைக் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால், அவர் அந்தப் பந்தியில் கூறப்பட்டிருந்த இரண்டாவது வசனமான ”The country may not have been confronted with a violent separatist agenda, if the political consensus at the time of independence had been sustained and if policies had been implemented to build up and strengthen the confidence of the minorities around the system which had gained a reasonable measure of acceptance” என்ற மிக முக்கிய பகுதியை நீக்கிவிட்டார்!!
ஆணைக்குழுவின் இப்பந்தியானது, தமிழர்களின் ஆயுதம் தாங்கிய தனிநாட்டுப் போரைக் கொள்கை அளவில் நியாயப் படுத்தவதாக அமைகிறது!!
நாகநாதனின் மகளது இந்த மூடிமறைப்பினை, ஏமாற்றினை என்னவென்று சொல்வது?
இவர் சட்டத்துறையில் Ph. D பட்டம் பெற்றவராகும்!!அப்படியான இவர் ஏன் இந்த மூடிமறைப்பினைச் செய்திருந்தாா்?
பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்தினைப் பெற்ற இவர், ஒரு அறிக்கையின் இன்ன பந்தி இதுபற்றிக்க் கூறுகிறது எனக் குறிப்பிட்டவிட்டு. அந்தப் பந்தியின் முக்கிய வசனத்தை நீக்கி எழுதும் தன்மையானவருக்கு எப்படி Ph. D. பட்டம் குறிப்பிட்ட பல்கலைக் கழகத்தால் வழங்கப்பட்டது?’
அல்லது இப்படியாக ஆய்வுகளை எழுதுகின்றவாகளுக்குத்தான் முனைவர் பட்டங்கள் வழங்கப்படுகிறதா?
இவா் போன்ற ஆங்கிலம் பேசும் போலிகளே இன்று ”கற்றோர்” எனப் போற்றப்படுகின்றனர்!!
இவருடன் சேர்ந்த ஆங்கிலம் பேசும் தமிழ் கூட்டம் ஒன்று பல்வேறு விடயங்களைப் பற்றி ஆங்கிலத்தில் இணையங்களிலும். பத்திரிகைகளிலும் திசை திருப்பல்களுடனும், மூடி மறைப்புக்களுடனும் எழுதி வருவதை அவதானிக்கமுடியும்.
இது தமிழ்க் ”கற்றோரும்,” சிங்கள ”கற்றோரும்,” தமிழ், சிங்கள ”ஆய்வாளர்களும்,” ஊடகவியலாளர்களும், அரசியல்வாதிகளும், இலங்கையின் இனப் பிரச்சினைக்கான மூலக்காரணத்தை சரியாக ஆராய்ந்து அறிந்து. அதை வாதித்து, அதைப் பகிரங்கமாகத் தமிழருக்கும், சிங்களவருக்கும், சர்வதேசத்திற்கும் கூறி, அக்காரணத்தை முழுமையாக எப்படி நீக்க முடியும் என்பதைப் பகிரங்கமாக விவாதித்துச் செயற்படும் மன வலிமையற்ற பேடிகள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஆனால், தமிழரசுக் கட்சியானது பிரதான எதிர்க் கட்சியாக இருந்துகொண்டு, மைத்திரி – ரணில் அரசுக்கு நிபந்தனையற்ற மிண்டு கொடுத்து வருகிறது. அதை நியாயப்படுத்தவும் ஒரு கூட்டம் தமிழர்கள் மத்தியில் உள்ளது.
முகநூலைப் பார்த்தால் அந்தக் கூட்டத்தினை அடையாளங்காண முடியும்.
பெரும்பான்மையான தமிழர்களால் தெரிவுசெய்யப்பட்ட இந்தத் தமிழரசுக் கட்சியின் அரசியல்தான் என்ன?
ஆனால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பின் உடன்பாட்டிற்கு அமைவாக ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்ட Task Force இன் ஒரு வருடகால கடும் உழைப்பினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையையே, இலங்கையின் ஜனாதிபதி மைத்திரியும், இலங்கையின் பிரதமர் ரணிலும் நேரடியாகப் கையேற்க மறுத்த நிலையில், Task Force இனரும், அதன் தலைவர் மனோரி முத்தட்டுவேகமவும் அங்கும், இங்குமென அலையவேண்டிய, கேவலப்படவேண்டிய நிலைதான் ஏற்பட்டிருந்தது!
தமிழர்களாலும், இஸ்லாமியராலும் அதிகாரத்தில் இருத்தப்பட்ட இந்த நல்லாட்சி அரசின் ஜனாதிபதியும், பிரதம மந்திரியும் Task Force இனது அறிக்கையை நேரடியாகப் பெறுவதை ஏன் நிராகரித்திருந்தனர்?
இவா்கள் உண்மையில் அரசியல் பேடிகள் என்பதை இது உறுதிப்படுத்தவில்லையா?
இவர்களை ”இராஜ தந்திர வல்லுனர்கள்” எனப் போற்றும் சில கூட்டங்களும் உள்ளன!இவைகள் ஒன்றிணையே அசைக்க முடியாதபடி உறுதிப்படுத்தகின்றன.இலங்கையில் சிங்கள ”தேரவாத” பௌத்தத் தேசியவாதம் தீவிரமாக இருக்கும்வரை, நாட்டின் அரசியல் பிரச்சினைக்கு திா்வு காணப்படமாட்டாது. சிங்கள ”தேரவாத” பௌத்தத் தேசியவாதம் தீவிரமாக இருக்கும்வரை, நாட்டில் ”தமிழ் தேசியவாதம்” என்பதும் தீவிரமாகத் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கும்.இதனால், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீா்வு காணப்படவே மாட்டாது!!
இந்த உண்மையை ஏற்காத கைக்கூலிகளும், கைப்பொம்மைகளும், முட்டாள்களும் நாட்டில் பெருமளவில் இருந்துதான் வருகின்றனர்!
நாட்டில் ஒரு பகுதி சமூகம் புறக்கணிக்கப்பட்ட. நசுக்கப்பட்டு வரும்வரை, நாட்டின் அரசியல் திரமானதாக இருக்கவே மாட்டாது. அங்கு நீதி என்பது போலியானதாகத்தான் இருக்கும். அங்கு லஞ்சம். ஊழல் என்பவை இல்லாது ஒழிக்கப்பட முடியாத நிலைதான் காணப்படும். நாட்டில் அமைதி என்பது போலியானதாகத்தான் இருக்கும். நாடு முன்னேறவும் மாட்டாது.
ஆனால், ”துரோகிகள்” என ஒவ்வொரு சமூகத்திலும் முத்திரை குற்றப்படும் சிறு சிறு சாராரும் தொடர்ந்தும் இருந்தே வருவர்!!
தம்மைத் தேசப்பற்றாளர், இனப் பற்றாளர்கள் எனக் காட்டும் போலிக் கூட்டங்களும் தொடர்ந்து இருந்துவரும்!!
இந்த உண்மையை ஏற்காது பல்வேறு வித புலம்பல்களைச் செய்கின்றவர்கள், உண்மையில், சுயநலவாதிகள், ஏமாற்றுக்காரர்கள்தான்!
அபிமன்யசிங்கம் உதயகுமார்