கனவான காதல்
வெடித்து சிதறும்
எரிமலை குழம்பாய்
எங்கங்கோ சிதறுகின்றன
அடைத்து வைக்கப்பட்ட
மனதுக் குள்ளான
நினைவலைகள் மேலெழும்பி
கலைந்துபோன கனவுகளாய்ப்
புதைக்கப்பட்ட காதல்
இரவு வெளிச்சத்தில்
எழுந்து வந்து இம்சிக்கிறது.
தண்ணீருக்குள் மூழ்கிக்
கிடக்கும் பொதிமூட்டையாய்
இதயத்தில் கனத்துக் கிடக்கும்
நினைவுகளை அவ்வப்போது
தூசிதட்டி பார்க்கிறேன்.
உன் அழகிய முகம் தெரிகிறது
உதடுகளை அசைக்கிறாய்
ஒளிரும் முகத்தில்
புருவவில்லின் துணையோடு
அம்பு விழிகளால்
என்னை ஆட்கொள்கிறாய்.
நாணத்தால் கட்டியிழுக்கிறாய்
கூந்தலில் குடியிருக்கும்
மல்லிகையைத் தூதாக்கி மஞ்சத்திற்கு அழைக்கிறாய்
நாளொன்றுக்கு நானூறுமுறை
உணர்ச்சிப் பெருக்கில்
உன்னோடு பேசியதும்
உச்சந்தலை தொடங்கி
உள்ளங்கால் வரைக்கும்
காதல் நரம்புகள்
புடைத்துச் சிலிர்த்ததுமான
காட்சிகளை யாரிடமும்
சொல்ல இயலாமல்
இரவுப்பொழுதில்
தனிமை இருளில் எனக்குள்
அழுது தீர்க்கிறேன்
புலவர் ச.ந.இளங்குமரன்
நாகலாபுரம், தேனிமாவட்டம்.