கத்தாரில் நடக்கவிருக்கும் உதைபந்தாட்டக் கோப்பைக்கான மோதல்களில் பெண் நடுவர்கள்!
சரித்திரத்தில் முதல் தடவையாக ஆண்களின் சர்வதேச உதைபந்தாட்டக் கோப்பைக்கான போட்டிகளுக்குப் பெண் நடுவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். FIFA எனப்படும் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டிகளின் நிர்வாக அமைப்பு இந்த முடிவை இன்று அறிவித்திருக்கிறது.
“இதன் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்னரே நாம் ஆரம்பித்த ஒரு நடவடிக்கை மாற்றம் முடிவுக்கு வருகிறது. ஆண்களின் உதைபந்தாட்ட மோதல்களுக்குப் பெண்கள் நடுவர்களாக அறிமுகப்படுத்துவதன் மூலம் எந்தப் பால் என்பதல்ல எவ்வளவு தகைமை ஒருவரிடம் இருக்கிறது என்பதையே நாம் முன்னிலைப்படுத்துகிறோம்,” என்று நடுவர்களைப் பயிற்றுவித்து நிர்வகிக்கும் அமைப்பின் தலைவரான பியர்லூஜி கொலீனா குறிப்பிட்டார்.
பிரான்ஸைச் சேர்ந்த ஸ்டெப்பனி பிரெப்பார்ட், ருவாண்டாவைச் சேர்ந்த சலீமா முகன்சாங்கா, ஜப்பானியரான யொஷீமி யமஷிதா ஆகியோர் தலைமை நடுவர்களாக இருப்பார்கள். அவர்களின் உதவி நடுவர்களாக பிரேசிலின் நௌஸா பக், மெக்ஸிகோவின் காரன் டியெஸ் மதினா, அமெரிக்காவின் காதரின் நெஸ்பிட் ஆகியோர் இயங்குவார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்