ஒளிக்கூற்று ஈரான், சவூதி அரேபியாவுக்கும் தெரிகின்றது, ஜப்பானுக்கும், தென் கொரியாவும் இருளடைந்த முகில்களுக்குக் கீழே.

பத்து நாட்களுக்கும் அதிகமாகிவிட்டன உலகக்கோப்பைக்கான உதைபந்தாட்ட மோதல்கள் ஆரம்பித்து. விரைவில் முதல் கட்ட விளையாட்டுகளில் கழற்றிவிடப்பட வேண்டிய அணிகளை உதறிவிட்டு 16 நாடுகளுக்கு இடையேயான மோதல்களுக்குக் கடக்கவிருக்கின்றன அணிகள். இவைகளில் ஆசிய அணிகளின் நிலைமை என்ன?

ஏழாவது தடவையாக உலகக்கோப்பை மோதல்களுக்குள் நுழைந்திருக்கும் ஜப்பான் கத்தார் 2022 இல் மின்னலடி அடித்த அணிகளில் ஒன்று. தனது முதலாவது மோதலில் ஜேர்மனிய அணியை வீழ்த்தியதன் மூலம் உலகின் உதைபந்தாட்ட ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது ஜப்பான். அந்த மெத்தனமோ என்னவோ இரண்டாவது மோதலில் அவர்களை கொஸ்டா ரிக்காவுடன் தோல்விபெற வைத்தது.

அவர்களின் E குழுவில் ஜப்பான் இரண்டாவது இடத்தில் இப்போது கொஸ்டா ரிக்கா அளவு புள்ளிகளுடன் இருக்கிறது. இனி அடுத்த கட்டத்துக்கு ஜப்பானிய அணி கடக்குமா என்பது, அவர்கள், தம்மை வென்ற கொஸ்டா ரிக்காவை 7 – 0 என்ற வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஸ்பெய்னை வெல்வார்களா என்பதில் தங்கியிருக்கிறது. ஸ்பெய்னுடன் சம அளவில் முடித்துக்கொள்வார்களாயின் கொஸ்டா ரிக்கா ஜேர்மனியை வெல்லாமல் கவனித்துக்கொள்ளவேண்டும்.

கொஸ்டா ரிக்கா ஜேர்மனியை வெல்லுமானால் ஜப்பானின் வெற்றிக்கிண்ணம் பற்றிய கனவு நீர்க்குமிழியாக வெடித்துவிடும்.

ஜப்பானை விட அதிக தடவைகள் உலகக்கோப்பை மோதல்களில் பங்குபற்றிய அணி தென் கொரியாவுடையது. 11 தடவைகள் இதுவரை அந்த மோதல்களில் ஈடுபட்டிருக்கும் அந்த அணி H குழுவின் கடைசி இடத்தில் இருப்பதால் அடுத்த கட்ட வாய்ப்பு ஜப்பானுக்கு இருப்பதை விடக் குறைவானதே.இதுவரை அவர்கள் உருகுவேயுடன் விளையாடிச் சமப்படுத்தியிருக்கிறார்கள், கானாவுடன் விளையாடியதில் 2 – 3 இழப்பைச் சந்தித்திருக்கிறார்கள்.

அவர்களுடைய வெற்றி போர்த்துக்கால் அணியை 2 க்கும் அதிகமான கோல்களால் வெற்றிபெற்று, கானா அணி தான் சந்திக்கவிருக்கும் உருகுவேயைச் சமப்படுத்தல் வேண்டும். உருகுவே தோல்வியடையுமானால் தென் கொரிய அணியினர் பெட்டிகளைக் கட்டி வீட்டுக்குச் செல்லத் தயாராக வேண்டும்.

B குழுவிலிருக்கும் ஈரானுக்கு அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும் சாத்தியமுண்டு. முதல் மோதலில் இங்கிலாந்துடன் தோல்வியுற்றாலும் இரண்டாவது மோதலில் வேல்ஸ் அணியை 2 – 0 என்ற வித்தியாசத்தில் வென்றதால் கிடைத்த சந்தர்ப்பம் அது. தனது குழுவில் இரண்டாவது இடத்திலிருக்கும் ஈரான் 3 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. பின்னாலிருப்பது 2 புள்ளிகளுடன் அமெரிக்கா, 1 புள்ளியுடன் வேல்ஸ் ஆகியோர், முதலிடத்திலிருக்கும் இங்கிலாந்திடம் 4 புள்ளிகள்.

அடுத்து மோதவிருக்கும் அமெரிக்காவை வென்றால் ஈரான் முன்னேறும். இங்கிலாந்தை எதிர்கொள்ளவிருக்கும் வேல்ஸ் வெற்றிபெறாவிட்டால் அமெரிக்காவுடன் சமமான முடிவையாவது பெறவேண்டும். 

தனது முதல் மோதலில் ஆர்ஜென்ரீனாவை வென்றதன் மூலம் உலகளவில் ஆச்சரியத்தை உண்டாக்கிய சவூதி அரேபியா ஆர்ஜென்ரீனாவளவு புள்ளிகளைப் பெற்று தனது C குழுவில் இரண்டாவது இடத்திலிருக்கிறது. கடைசி இடத்தில் ஒரேயொரு புள்ளியுடனிருக்கும் மெக்ஸிகோவை வெல்வதன் மூலம் சவூதி அரேபியா அடுத்த கட்டத்துக்கு முன்னேறலாம் இல்லையேல் பெட்டியைக் கட்டலாம்.

மெக்ஸிகோவால் தோற்கடிக்கப்பட்டால் நிலைமை சிக்கலாகும். மெக்ஸிகோவுடன் சம அளவைப் பெற்றால் முதலிடத்திலிருக்கும் போலந்து தான் சந்திக்கும் ஆர்ஜென்ரீனாவை வெல்லவேண்டும். ஆர்ஜென்ரீனா பல கோல்கள் வித்தியாசத்தி வெல்லுமானாலும் சவூதி அரேபியாவுக்கு முன்னேறச் சந்தர்ப்பமுண்டு.

ஆசியாவின் பகுதியல்ல ஆஸ்ரேலியா ஆனால் ஆசிய உதைபந்தாட்ட அமைப்பின் அங்கத்துவர்களில் ஒருவர். துனீசியாவிடம் 1 – 0 என்று வெற்றிபெற்றாலும் பிரான்ஸுடன் 4 – 1 வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது ஆஸ்ரேலியா. அவர்களுடைய குழுவில் பிரான்ஸ் அடுத்த கட்டத்துக்குப் போவது நிச்சயமாகிவிட்டது. 

குழுவின் மூன்றாவது இடத்திலிருக்கும் டென்மார்க்கை வென்றால் போதும் ஆஸ்ரேலியாவுக்கு. டென்மார்க்குடன் சமப்படுத்தினால் அதே சமயம் துனீசியா அடுத்த மோதலில் பிரான்ஸை வென்றால் ஆஸ்ரேலியா முன்னேறும்.  

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *