இத்தாலியில் மண்சரிவு மரணங்களையடுத்து கமரூனிலும் அதே இயற்கை அழிவு.

இத்தாலியின் இஷியா தீவில் கடும் மழையால் ஏற்பட்ட மண்சரிவால் ஏழு பேர் இதுவரை மரணமடைந்திருப்பதாக மீட்புப் படையினரில் செய்திகள் குறிப்பிடுகின்றன. அவர்களில் ஒரு கைக்குழந்தையும் இரண்டு பிள்ளைகளும் அடக்கம். சனியன்று நடந்த அந்த இயற்கை அழிவைக் கேட்டதும் உடனடியாக மீட்புப் படையினர் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டார்கள். ஐந்து பேரை மேலும் காணவில்லை என்று குறிப்பிட்டுத் தேடுதல் நடந்து வருகிறது.

இஷியா தீவின் உயரமான மலைப்பகுதியிலிருந்து களிமண்ணும், நீரும் சேர்ந்த ஆறு போன்று மண்சரிவானது பக்கத்திலிருந்து கட்டடங்களின் மீது விழுந்ததாகச் சாட்சிகள் தெரிவிக்கின்றன. வெளியாகியிருக்கும் படங்கள் அங்கே பல கட்டடங்கள் இடிபாடுகளாகிச் சிதைந்திருப்பதையும், வாகனங்கள் அச்சிதைவுகளின் கீழே நசுங்கியிருப்பதையும் காட்டுகின்றன.

கமரூன் நாட்டின் தலைநகரான யாவுண்டேயில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு மண்சரிவு உண்டாகி 14 பேரின் உயிரைக் குடித்திருக்கிறது. ஐந்து பேரின் மரணச்சடங்குகள் ஒரு குன்றின் மீது நடந்துகொண்டிருக்கும்போது அந்த மண் சரிவு ஏற்பட்டது. மரணச்சடங்கின்போது நடனம் ஆடிக்கொண்டிருந்தவர்களின் காலுக்குக் கீழே நிலம் இடிந்து விழப் பலர் களிமண்ணுக்குள் மாட்டிக்கொண்டார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 

மோசமான மண்சரிவுப் பிராந்தியத்துக்கு மீட்புப் படையினர் உடனடியாக விரைந்தனர். மரணச் சடங்குகளுக்காக அமைக்கப்பட்டிருந்த நாலு கூடாரங்களிலும் நூற்றுக்கணக்கானோர் சமூகமளித்திருந்தனர். அவர்களும் சேர்ந்து தமது உறவினர்களைத் தேடிக்கொண்டிருக்க அப்பகுதி போர் நடந்த இடம்போல மாறியிருந்ததாக செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்களை சம்பவம் நடந்த இடத்தை நெருங்கவிடாமல் மீட்புப் படையினர் தடை செய்துவிட்டதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கமரூனில் மண்சரிவுகள் ஏற்படுவது அடிக்கடி நடப்பதுண்டு. ஞாயிறன்று நடந்தது போன்ற மோசமான மண்சரிவும், அதிக எண்ணிக்கையிலான மண் சரிவுகளும் சமீப காலத்தில் நடந்ததில்லை என்று மீட்புப் படையினரின் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இத்தாலியின் இஷியா தீவில் சமீப வருடங்களில் மண் சரிவுகளின் எண்ணிக்கையும், தீவிரமும் அதிகமாயிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. குன்றுகளும், பள்ளங்களுமான நிலப்பரப்பைக் கொண்ட அத்தீவில் சமீப வருடங்களில் அப்படியான இயற்கை அழிவுகள் ஏற்படக் காரணம் கால நிலை மாற்றத்தின் விளைவுகளில் ஒன்றே என்பது புவியியல் வல்லுனர்கள் கருத்து. 

அத்துடன் இஷியா தீவில் கட்டப்பட்டிருக்கும் பல கட்டடங்கள் சட்ட விரோதமாக அனுமதியின்றிக் கட்டப்பட்டவையே. அதனால் அங்கே வாழும் மக்களில் பலர் நிரந்தரமாகவே ஆபத்துக்கு உட்படுத்தப்பட்டே வாழ்கிறார்கள். அனுமதியில்லாத கட்டடங்களை அழித்துவிடும்படி நடவடிக்கை எடுக்கும்போதெல்லாம் அரசியல்வாதிகள் மூக்கை நுழைத்து சிலரைக் காப்பாட்டிவிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு மண்சரிவு மரணங்களையடுத்து மீண்டும் தலையெடுத்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *