மனித குலத்தின் ஆரம்பகாலத்தில் வாழ்ந்த நியாந்தர்தால் இனத்தவர் ஒன்பது பேரின் எலும்புகள் இத்தாலியக் குகைக்குள் கிடைத்தன.

மனித குலத்தின் பரிணாம வளர்ச்சிக்கு முன்னர் வாழ்ந்த இனமான நியாந்தர்தால் காலத்தினர் ஒன்பது பேரின் எலும்புகள் குகையொன்றில் இத்தாலியில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்களில் எட்டுப் பேர் 50,000 – 68,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம். மற்ற ஒருவர் 90,000 – 100,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

இத்தாலியின் நேப்பிள்ஸ் – ரோம் நகரங்களுக்கு இடையே குகைப்பகுதியொன்றில் இவைகள் காணப்பட்டன. இதை அடுத்த பகுதியில் ஏற்கனவே கிட்டத்தட்ட அதே காலத்தில் வாழ்ந்த மேலும் இரண்டு இதே இனத்தவர்களின் எலும்புகள் கிடைத்திருக்கின்றன. குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்த அந்த இனத்தவர்களைப் பற்றிய ஆராய்ச்சிக்கு இந்த எலும்புகள் மிகவும் உதவும் என்கிறார்கள் அவற்றைக் கண்டுபிடித்த அகழ்வாராய்ச்சியாளர்கள்.

இடிந்துவிழும் அபாயமிருப்பதாகக் கருதி அந்தக் குகைகள் பழங்காலத்திலிருந்தே மூடப்பட்டதாகத் தெரிகிறது. 1939 இல் தற்செயலாகச் சிலரால் எலும்புகள் முதலில் கண்டெடுக்கப்பட்டன. அதையடுத்து அங்கே தேடியதில் பல்லாயிரக்கணக்கான மிருக எலும்புகள் கிடைத்திருக்கின்றன. அவைகளில் தற்போது அழிந்துவிட்ட மிகப்  பெரிய இன மிருகங்களின் எலும்புகளும் அடக்கம். 

பெரும்பாலான எலும்புகளில் பற்களால் கடித்த அடையாளங்கள் இருக்கின்றன. காரணம் ஓநாய், நரி போன்ற மிருகங்கள் அப்பிராந்தியத்தில் கிடைத்த இறந்த உடல்களை அக்குகைகளுக்குள் கொண்டுவந்து பாதுகாத்துக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *