ஈராக்கின் அதிமுக்கிய நீர்த்தேக்கம் பெருமளவில் வற்றிவிட்டது.
ஈராக்கின் தலைநகரான பக்தாத்துக்கு வடகிழக்கிலிருக்கும் ஹம்ரீன் குளம் பெருமளவில் வற்றிப்போய்விட்டதாக நாட்டின் நீர்வளத்துறை தெரிவிக்கிறது. பல வருடங்களாக மழைவீழ்ச்சி தொடர்ந்து குறைந்திருப்பதால் அக்குளத்துக்குத் தண்ணீரைக் கொண்டுவரு சிர்வான் ஆற்றின் நீர்மட்டம் குறைந்துவிட்டதே ஹம்ரீன் குளத்தின் வரட்சிக்குக் காரணம்.
சிர்வான் ஆறு ஈரானிலிருந்து ஈராக்குக்குள் பாய்கிறது. அதை மறித்து ஈரான் தனது பக்கத்தில் அணைக்கட்டுக் கட்டியிருப்பதும், வேறு வழிகளில் திருப்பி விட்டிருப்பதுவும் ஹம்ரீன் குளத்துக்குத் தேவையான நீர் கிடைக்காததற்குக் காரணமாகும். சுமார் 2 பில்லியன் கியூபிக் மீற்றர் நீர் வழக்கமாகத் தேங்கி நிற்கும் ஹம்ரீன் குளத்தில் வெறும் 130 மில்லியன் கி.மீற்றர் நீரே இருப்பதாக நிர்வாகிகள் குறிப்பிட்டார்கள்.
பாக்தாத்தின் அருகேயிருக்கும் டியாலா மாகாணத்தின் விவசாயத்துக்கான நீர்த்தேவையை ஹம்ரீன் குளமே கொடுத்து வருகிறது. இதற்கு முன்னர் 2009 இல் அக்குளம் முற்றாகவே வற்றிப்போயிருந்தது. ஈராக்கிய அரசு தனது பக்கத்து நாடான ஈரானிடம் அங்கிருந்து வரும் சிர்வான் ந்தியின் நீரோட்டத்தை மறிக்காமல் அதில் அதிக நீரை அனுமதிக்கும்படி வேண்டுகோள் விட்டிருக்கிறது.
ஈராக் மட்டுமன்றி பக்கத்து நாடான ஈரான், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளும் கூடக் கடுமையான வரட்சியையும் அதனால் ஏற்பட்டிருக்கும் விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகின்றன. உலகில் ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றங்களினால் பெருமளவில் வேகமாகப் பாதிக்கப்பட்டு பாலைவனம் பரவும் நாடுகளில் ஒன்றாக ஈராக் பல வருடங்களுக்கு முன்னரே சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்