தனது நாட்டிலிருந்து ஒரு மில்லியன் சிரிய அகதிகளைத் திருப்பியனுப்ப துருக்கி திட்டமிடுகிறது.
சிரியாவின் வடக்கில் துருக்கியின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளுக்கு ஒரு மில்லியன் புலம்பெயர்ந்த் சிரியர்களைத் திருப்பியனுப்பத் திட்டமிட்டு வருவதாக ஜனாதிபதி எர்டகான் தெரிவித்தார். குறிப்பிட்ட பகுதிகளில் அவர்களுக்கான வீடுகள் மற்றும் தேவையான வசதிகளையும் துருக்கி தனது உதவித் திட்டங்கள் மூலம் ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஏற்கனவே அரை மில்லியன் சிரியர்களை அப்பகுதிகளில் குடியேற வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சர்வதேச உதவி அமைப்புக்களுடன் சேர்ந்து சிரியாவின் இட்லிப் பிராந்தியத்தில் 100,000 வீடுகளைத் துருக்கி கட்டிக்கொடுக்கும்.
சமீப வருடங்களில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பின்னடைவிலும் துருக்கி சுமார் 3,7 மில்லியன் சிரிய அகதிகளையும் 1,7 மில்லியன் மற்றைய நாட்டு அகதிகளையும் தனது நாட்டினுள் தங்க அனுமதித்திருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, நாணய மதிப்பும் பெருமளவில் வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில் நாட்டுக்குள் வாழும் வெளிநாட்டவர்கள் தமது சந்தர்ப்பங்களுக்கு இடையூறாக இருப்பதாக துருக்கியில் ஒரு சாரார் கருதுகிறார்கள். அந்த அழுத்தம் நாட்டின் முக்கிய நகரங்களில் சமூகங்களுக்கு இடையிலான வன்முறையாகச் சமீப காலத்தில் உருவெடுத்திருக்கின்றது.
அடுத்த வருடத்தில் நாட்டில் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் எர்டகான் அங்கே வாழும் அகதிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் தனது வாக்காளர்கள் தனக்கெதிராகத் திரும்பிவிடலாம் என்று அஞ்சுகிறார் எர்டகான். கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர் வரை சிரியாவிலிருந்து துரத்தப்பட்டு வந்தவர்களைத் தான் திருப்பியனுப்பப் போவதில்லை என்று அவர் பல தடவைகள் குறிப்பிட்டிருக்கிறார். முதல் தடவையாக, அகதிகளைக் “கௌரவமாகத் திருப்பியனுப்புதல்,” திட்டம் பற்றி அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
துருக்கிய மனிதாபிமானத் திட்டங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் குடியேற்றங்களில் வீடுகள் மட்டுமன்றி, போக்குவரத்து, மருத்துவசாலைகள், பாடசாலைகள் உட்பட சகலமுமே தயாராக்கிக் கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்