துருக்கிய வெளிவிவகார அமைச்சர் நீண்ட காலத்தின் பின்னர் இஸ்ராயேலுக்கு விஜயம் செய்கிறார்.
15 வருட இடைவெளிக்குப் பின்னர் முதல் தடவையாக துருக்கிய வெளிவிவகார அமைச்சரொருவர் இவ்வாரம் இஸ்ராயேலுக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்யப்போகிறார். வெளிவிவகார அமைச்சர் மெவ்லெட் கவ்சோக்லு இன்று புதன் கிழமை துருக்கியின் எரிசக்தி அமைச்சருடன் இஸ்ராயேலின் வெளிவிவகார அமைச்சர் யாய்ர் லப்பிடைச் சந்திக்கவிருக்கிறார்.
பாலஸ்தீனப் பிரச்சினையில் இஸ்ராயேலைக் கண்டிக்கும் துருக்கியின் இந்த உயர்மட்டச் சந்திப்பு அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், வர்த்தக நெருக்கம் வளர்வதைத் தெரிவிப்பதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகிறார்கள். இஸ்ராயேலின் எரிவாயுவைத் துருக்கிக்குக் கொண்டுவந்து அங்கிருந்து ஐரோப்பாவுக்கும் கிடைக்கச் செய்யும் திட்டமொன்றைப் பற்றி அவ்விரு நாட்டினரிடையேயும் பேச்சுவார்த்தைகள் நடக்கவிருக்கின்றன.
ஜெருசலேமில் அமெரிக்கா தனது தூதுவராலயத்தை 2018 இல் திறந்தபோது ஏற்பட்ட பாலஸ்தீனர்களின் எதிர்ப்புகளின்போது இஸ்ராயேல் சுமார் 60 பேரைச் சுட்டுக் கொன்றது.அதை எதிர்த்துத் துருக்கி அங்கிருந்த தனது தூதுவராலயத்தை மூடியது. அது தவிர மேலும் பல மத்திய கிழக்கு அரசியல் விவகாரங்களிலும் இவ்விரு நாடுகளும் ஒத்துப் போவதில்லை.
மார்ச் மாதத்தில் இஸ்ராயேலின் ஜனாதிபதி இசாக் ஹெர்சோக் துருக்கிக்குச் சென்று ஜனாதிபதி எர்டகானைச் சந்தித்தார். அச்சந்திப்பின் பின்னர் இரண்டு தரப்பாரும் தமது நாடுகளுக்கிடையிலான உறவை மீண்டும் புதுப்பிப்பது பற்றி விருப்பம் தெரிவித்திருந்தார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்