‘ள்’ ஈறு தான் அவள் …..

‘ள்’ ஈறு தான் அவள் …..
முடிவில்லாதவள் அவள் ….
கருவில் உதித்த முதற் கடவுள் அவள் ….
குழவியாய் விளையாடிய விசித்திரம் அவள் …..
தென்றலிலே மிதந்து வந்த தென்பாண்டிப் பதுமை அவள் …
சங்கம் வைத்தாலும் சரி ….
சரித்திரம் படைத்தாலும் சரி …..
முத்தமிழும் அங்கு அவள் ….
மூத்த தமிழும் அங்கு அவள் …..
முடிவற்ற கன்னித் தமிழும் அவள் ! பழந்தமிழும் அவள் ! பசுமையான பைந்தமிழும் அவள் !

இயற்றமிழில் இனிமை காட்டியவள் அவள் ….
இசைத்தமிழில் இயல்பாய் வந்தவள் அவள் …
நாடகத் தமிழில் என்னை வசப்படுத்தியவள் அவள்  ….
அகம் பாடினேன் தலைவியாய் வந்தாள் அவள் ….
புறம் பாடினேன் கொற்றவை ஆனாள் அவள் …
அகமும், புறமும் கலந்து பாடினேன் இங்கு
அகிலமே ஆனாள் அவள் …..

கரம் பிடித்து காலத்தை வென்றாள் அவள் ….
கருவாக்கி எனக்கு உரு கொடுத்தாள் அவள் ….
திசை எட்டிலும் வழிகாட்டினாள் அவள் ….
சங்க இலக்கியத்தில் அமிழ்தானாள் அவள் …
இக்கால இலக்கியத்தில் சுவையானாள் அவள் ….

‘ள்’ ஈற்றுப் பெண்பால் அவள் …..
பக்தி இலக்கியத்தில் இறையானாள் அவள் ….
நாவல் இலக்கியத்தில் நயமானாள் அவள் ….
இலக்கணத்தில் காரிகையானாள் அவள் …..
பார்க்கும் பொருள் அவளானாள் அவள் …
நினைக்கும் போது உறவானாள் அவள் ….
தேடும் போது திகட்டவில்லை அவள் ….
அகத்தியனுக்கே முன்னோடி அவள் …

கம்பன் தந்த காவியம் அவள் ….
இளங்கோ வரைந்த கண்ணகி அவள் …
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் அவள் ….

இப்படி என்னுள் எல்லாம் ஆனாள் அவள் …..
ஆம் ! ‘ள் ‘ ஈற்றுப் பெண்பால் அவள் !

எழுதுவது : ச.சோமசேகர், தருமபுரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *