சிறீலங்காவுக்குப் புதிய கடன்களெதையும் கொடுக்க முடியாது என்று தெரிவித்தது உலக வங்கி!
எதிர்காலத்தில் சிறீலங்கா தனது காலில் நிற்கக்கூடிய காலத்தில் தரும் என்று எதிர்பார்த்து எந்தக் கடனையும் அந்த நாட்டுக்கு வழங்கத் தயாராக இல்லை என்று கைவிரித்திருக்கிறது உலக வங்கி. அத்துடன் புதிய கடங்கள் தருவதாக வாக்குறுதி கொடுக்கவும் தாம் தயாராக இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. தமது நிலைப்பாடு மாறவேண்டுமானால் முதலில் நாட்டின் பொருளாதாரக் கோட்பாடுகளில் மாற்றங்கள் கொண்டுவந்து, அதை ஒவ்வொரு படியிலும் [macroeconomic policy] எப்படிச் செயற்படுத்துவது என்பது பற்றிய தெளிவான விபரங்களை அந்த நாடு சமர்ப்பிக்கவேண்டும் என்று கோரியுள்ளது உலக வங்கி.
நாட்டின் பலவீனமானவர்களுக்குச் சென்றடையக்கூடிய உதவிகள் மற்றும் அவசர மருந்துகள், உபகரணங்களுக்கான உதவிகளை மட்டுமே தற்சமயம் தாம் சிறீலங்காவுக்குக் கொடுக்கவிருப்பதாக உலக வங்கி மேலும் தெரிவித்தது.
“சிறீலங்கா மக்களின் தற்போதைய நிலைமை பற்றி நாம் விசனமடைந்திருக்கிறோம். அதனால் சர்வதேச நாணய நிதியம், மற்றும் சர்வதேச முதலீட்டு நிறுவனங்கள் போன்ற அமைப்புக்களுடன் சேர்ந்து அந்த நாட்டின் அதிகாரத்துக்கு ஆலோசனைகளை வழங்குகிறோம். அந்த ஆலோசனைகள் மூலம் அவர்களுடைய பொருளாதாரக் கோட்பாட்டு வடிவமைப்பு, அதை நிதித்துறையின் சகல பாகங்களிலும் செயற்பாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை அவர்கள் முடிவுசெய்யவேண்டும்,” என்கிறது உலக வங்கியின் அறிக்கை.
நாட்டின் சரித்திரத்தில் மோசமான நிதிநிலைமையை நேரிட்டிருக்கும் சிறீலங்கா 51 பில்லியன் டொலர்கள் கடனைச் சுமந்துகொண்டிருக்கிறது. அவற்றுக்குக் காலாகாலத்தில் கொடுக்கவேண்டிய வட்டியையும் கொடுக்க முடியாதென்று சமீபத்தில் கைவிரித்திருக்கிறது. கூனிப் போயிருக்கும் நாட்டின் நிதி நிலைமை முதுகைச் சிறிதாவது நிமிர்த்தக்கூடிய அவகாசம் கிடைக்க வேண்டுமானால் 4-5 பில்லியன் டொலர்கள் அவசரமாகக் கிடைக்கவேண்டும்.
எங்கிருந்தும் அந்தத் தொகையைப் பெற முடியாத நிலைமையில் நாடு இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் உதவிக் கடன் உறுதிகளால் மூச்சுவிட்டுக்கொண்டிருக்கிறது. அதனால் பணவீக்கம் பலமாக எகிறிச் சுமார் 40 % ஐத் தொட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்