இலங்கையில் உள்நாட்டுத் திரிபுகள்உருவாக மிக வாய்ப்பான களநிலை! மருத்துவ நிபுணர் ஒருவர் எச்சரிக்கை.

திரிபடைந்த வைரஸ் கிரிமி தொடர்ந்துஅதிகமானவர்களிடையே தொற்றுகின்ற காரணத்தால் அது மேலும் புதிய பிறழ்வுகளை எடுக்கிறது. டெல்ரா வைரஸ் திரிபு அவ்வாறு உள்ளூர் மட்டத்தில் புதிய வடிவங்களை(variant mutating locally) எடுப்பதற்கு வாய்ப்பான நிலைவரம் இலங்கையில் காணப்படுகிறது.

அந்நாட்டின் மருத்துவ நிபுணர் ஒருவர் இவ்வாறு எச்சரித்திருக்கிறார். கொழும்பு சிறிஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் அணு உயிரியல் பிரிவின் (Allergy, Immunology, and Cell Biology Unit) இயக்குநர் மருத்துவர் சன்டிமா ஜீவந்தராவே(Chandima Jeewandara) இத்தகவலை ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்திருக்கிறார்.

ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகம் கடைசியாக வெளியிட்ட தரவுகள் நாட்டில் டெல்ரா வைரஸ் தொற்றாளர்களது

எண்ணிக்கை 117 பேர் எனக் குறிப்பிடுகிறது. இந்த எண்ணிக்கை முக்கியமானதல்ல என்று குறிப்பிட்டிருக்கும் சன்டிமா ஜீவந்தரா, அது இப்போது எல்லாப் பகுதிகளிலும் பரவியுள்ளது. எனவே அதன் அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சியைக் கண்காணிப்பதும் தடுப்பதும் தான் மிக அவசரமானது என்று கூறியிருக்கிறார்.

தன் வசம் இருக்கின்ற உச்ச வளங்களைப் பயன்படுத்தி வைரஸின் புதிய பிறழ்வுகளை ஆய்வு செய்து அவற்றின் மரபு வரிசையை(sequencing) அறிகின்ற முழு முயற்சியில் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு ஏற்ப அந்தப் பரிசோதனைகளை மேலும் விரைவுபடுத்துகின்ற அளவுக்கு எங்களிடம் வளங்கள் இருப்பதாக நான் கருதவில்லை – என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் டெல்ரா வைரஸில் இருந்து தோன்றிய டெல்ரா பிளஸ் (Delta Plus) என்பது வைரஸ் திரிபு ஒன்று தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக எடுக்கின்ற புது வடிவமாகும் என்பதை அவர் நினைவூட்டினார். அமெரிக்காவில் முதலில் தோன்றிய “எப்சிலன்” திரிபும் (Epsilon variants) டெல்ரா பிளஸ் ரகத்தைச் சேர்ந்ததே என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்குள் மேலும் புதிய திரிபுகள்பரவுகின்றனவா என்பதை அறிகின்றபரிசோதனைகள் நடைபெற்றுவருகின்றன. அதன் முடிவுகள் அடுத்த வார இறுதியில் வெளியிடப்படலாம்-என்ற தகவலையும் மருத்துவர் சன்டிமா வெளியிட்டார்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *