நாட்டோ சகாக்களான துருக்கிக்கும் கிரீஸுக்கும் இடையே பிளவு பெருக்கிறது.
துருக்கியும், கிரீஸும் நீண்ட காலமாகவே தமக்குள் குரோதங்களைக் கொண்டிருக்கும் நாடுகளாகும். அவ்வப்போது அவை காட்டமான வாய்ச்சண்டைகளால் உச்சக் கட்டத்தைத் தொடுகின்றன. சமீபத்தில் துருக்கிய பாராளுமன்றத்தில், “என்னைப் பொறுத்தவரை மிட்ஸோதாக்கிஸ் என்ற ஒருவர் கிடையாது,” என்று கிரீஸ் பிரதமரைக் குறிப்பிட்டுப் பொருமியிருக்கிறார் ஜனாதிபதி எர்டகான்.
நாட்டோ அமைப்புக்குள் ஒற்றுமை பெருமளவில் எதிர்பார்க்கப்படும் இந்தச் சமயத்தில் என்றுமில்லாத அளவுக்கு கிரீஸுக்கும், துருக்கிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் கிரீஸ் பிரதமர் கிரியாக்கோஸ் மிட்ஸோதாக்கிஸின் அமெரிக்க விஜயத்தின்போது அவர் துருக்கிக்கு F 16 போர்விமானங்களை அமெரிக்கா விற்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டதாகும். ஏற்கனவே F 35 போர் விமானங்களைத் துருக்கிக்கு விற்க அமெரிக்கா மறுத்து வருகிறது. அதன் காரணம் துருக்கி சில வருடங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் ஏவுகணைப் பாதுகாப்பு ஆயுதங்களை வாங்கியதாகும்.
நாட்டோ அமைப்பின் மிகப் பெரும்பான்மை அங்கத்துவர்கள் அதில் சேரவிருக்கும் சுவீடன், பின்லாந்து நாடுகளை விரைவாக இணைத்துக்கொள்ள விரும்பும் சமயத்தில் துருக்கி அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருவதால் அவ்வமைப்பின் அங்கத்துவர்களிடையே துருக்கியின் மீது அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. தமது எல்லையில் ரஷ்யா நடத்தி வரும் ஆக்கிரமிப்பை எதிர்நோக்க வேண்டிய சமயத்தில் துருக்கி சக அங்கத்துவ நாடுகளுடன் ஒன்றுபடாமல் முரண்பட்டுக்கொண்டிருப்பது பற்றிப் பலரும் எரிச்சலடைந்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்